அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் – தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் இரண்டு புதல்வர்களும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
அந்த வகையில் அதாஉல்லாவின் மூத்த புதல்வரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயருமான அஹமட் சக்கி – மூன்றாவது முறையாக அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
இதேவேளை அதாஉல்லாவின் இளைய மகன் அஹமட் டில்ஷான் என்பவர், அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் இரண்டாது தடவையாக இம்முறையும் போட்டியிடுகின்றார். இவர் கடந்த தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவானார்.
அக்கரைப்பற்றை சொந்த இடமாகக் கொண்ட அதாஉல்லா, கடந்த காலங்களில் அமைச்சராக இருந்தபோது, பிரதேச சபை தரத்தில் இருந்த அக்கரைப்பற்றை, அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை என இரண்டாகப் பிரித்தார்.
அந்த வகையில் அக்கரைப்பற்று மாநகர சபை உருவாக்கப்பட்டதிலிருந்து அதாஉல்லாவின் மூத்த புதல்வரே மேயராகப் பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனை கேலி செய்யும் வகையில், அக்கரைப்பற்று ‘மாநகர சபை’யை உள்ளூர் மக்கள் – ‘மகனாரின் சபை’ என குறிப்பிடுவதுண்டு.
அதாஉல்லா – தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளை வகிக்கின்ற தேசிய காங்கிரஸ் சார்பாகவே, அவரின் புதல்வர்கள் இருவரும் அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் தொடர்ச்சியாகப் போட்டியிடுகின்றனர்.