Our Feeds


Friday, January 6, 2023

SHAHNI RAMEES

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியல் திரளவேண்டுமெனக் கோரி பாண்டிருப்பில் போராட்டம்...!

 

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை  வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியல் திரளவேண்டும் என கோரி, அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பு திரௌபதை ஆலய முன்றலில் இன்று (ஜன. 6) பொதுமக்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடகிழக்கில் 8 மாவட்டங்களிலும், தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுமாறு வலியுறுத்தி, கடந்த 5ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10ஆம் திகதி வரையிலான தொடர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று மக்கள் ஒன்றுதிரண்டு இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.



இதன்போது வடக்கு, கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு பேச்சுவார்த்தையில் சிறுபான்மை தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஒரே குரலில் ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்த வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீள் ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு, கிழக்கு தனி ஒரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாண அலகின் ஆட்சியானது மக்களால் ஜனநாயகமான தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையால் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் பெண்கள் 50 வீதம் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். 

வடக்கு, கிழக்கு மாகாண எல்லைக்குட்பட்ட காணிகள் யாவும் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும். 

தற்போது வடகிழக்கில் காணப்படும் இராணுவமயமாக்கல் முற்றிலும் நீக்கப்பட்டு தேசிய பாதுகாப்புக்கான இராணுவம் 1983க்கு முன்னர் இருந்த இடங்களில் மாத்திரம் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் மத கலாசார இடங்கள், தொல்பொருள் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் உடன் நிறுத்தல் வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்களுடன் கோஷம் எழுப்பியவாறு பொதுமக்கள் சத்தியாக்கிரக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »