(எம்.மனோசித்ரா)
ராஜபக்ஷாக்களைப் போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், தற்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையே எதிர்காலத்திலும் ஏற்படும்.
அவரது தான்தோன்றித் தனமான செயற்பாடுகளுக்கு எதிராக ஞாயிறன்று நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கூட்டணியமைக்கவுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். காரணம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொள்ளையர்களுக்கு இடமளிக்காத சிறிகொத்தாவில் இன்று இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளமை எமக்கு கவலையளிக்கிறது.
எவ்வாறிருப்பினும் யானை, மொட்டு என இரண்டையும் தோற்கடிப்போம். தற்போது மத்திய வங்கி கொள்ளையர்களும் , பொது சொத்து கொள்ளையர்களும் ஒன்றிணைந்துள்ளனர். எனவே இவர்களது கூட்டணி தொடர்பில் எமக்கு எவ்வித சிக்கலும் இல்லை.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் செயற்பாடுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், சுயாதீனமாக செயற்படவுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதற்காக ஐ.தே.க. மற்றும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுக்கின்றார்?
தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்காக அரசாங்கம் அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடுகிறது. கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என ஆணையிடுவதற்கு அமைச்சரவைக்கோ, பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கோ அதிகாரம் கிடையாது. இவ்வாறு செயற்பட்டால் அமைச்சரவைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்.
முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ மீது கனடா தடை விதித்துள்ளது. தற்போது அவர்களைப் போன்று உரிமை மீறல்களில் ஈடுபட்டு;க் கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எதிர்காலத்தில் இதே நிலைமையே ஏற்படும்.
அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் , மின் கட்டண அதிகரிப்பு உள்ளிட்டவற்றை எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம். தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சித்தால் இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றார்.