Our Feeds


Friday, January 13, 2023

Anonymous

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கஞ்சா விவகாரம் : அத்திமலை பொலிஸ் பொறுப்பதிகாரியும் அதிரடி கைது!

 



(எம்.எப்.எம்.பஸீர்)


மொனராகலைக்கு பொறுப்பாக இருந்த  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சிசில குமார கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அத்திமலை, பொலிஸ் பரிசோதகர் எம்.எம். சஞ்சய் தர்மதாசவையும் சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர்.


சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்த கஞ்சா செடிகள், கடந்த 6 ஆம் திகதி சுற்றிவளைப்பொன்றின் போது கைப்பற்றப்பட்டவை எனவும், அதனை அத்திமலை பொலிஸ் பொறுப்பதிகாரியே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் பணிப்பில் அவரது  உத்தியோகபூர்வ இல்லத்துக்கு பொலிஸ் ஜீப் வண்டியில் எடுத்து வந்துள்ளமையும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி, கடமைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நிலையிலேயே சி.ஐ.டி. அதிகாரிகள் அவரை கைது செய்வதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.


சியம்பலாண்டுவ பொலிஸ் பரிசோதகர் டி.எம்.எம்.ஐ.பண்டார தலைமையிலான  சுற்றிவளைப்புக் குழுவினர் கபிலித்த காட்டுக்குச் சென்று  சில நாட்கள் தங்கியிருந்து,  சட்டவிரோத  கஞ்சா சேனை ஒன்று பற்றிய தகவல்களை சேகரித்துள்ளனர். 


கபிலித்த காட்டுப் பகுதியில் புபுர எனும் இடத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த கஞ்சா பயிர் செய்கை தொடர்பில் அனைத்து தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டு, அக்குழுவினரால்  கடந்த   6 ஆம் திகதி  சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவைக் கொண்ட அந்த சேனை சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.


இதன்போது சுற்றிவளைப்புக்கு  சென்றவர்கள் இந்த கஞ்சா சேனை தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமாரவுக்கு  அறிவித்துள்ளனர்.


அதன் பின்னர், வழமையான மரபுக்கு அப்பால் சென்று இந்த சுற்றி வளைப்பு குறித்த விசாரணைகளை முன்னெடுத்து   வழக்குப் பொருட்களைக் கொண்டு வருமாறு மொனராகலைப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார அத்திமலை, பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.சஞ்சய் தர்மதாசவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


அதன்படி, அத்திமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றுமொரு குழுவினருடன் உரிய இடத்திற்குச் சென்றுள்ளதுடன்,  சுற்றிவளைக்கப்பட்ட கஞ்சா சேனையிலிருந்த கஞ்சா செடிகளை உழவு இயந்திரத்தில் வழக்குப் பொருட்களாக ஏற்றிச் செல்லுமாறு  பணிப்புரை விடுத்துள்ளனர்.


நான்கு முதல் ஐந்து அடி உயரமுள்ள 25,000க்கும் மேற்பட்ட  கஞ்சா செடிகள் அத் தோட்டத்தில் இருந்து ஒரு உழவு இயந்திரமொன்றில் ஏற்றி அத்திமலை பொலிஸ் நிலையத்துக்கு இதன்போது எடுத்து செல்லப்பட்டுள்ளன.


இந்நிலையில் அத்திமலை பொலிஸ் நிலையத்தில்  230 கஞ்சா செடிகள் மட்டுமே வழக்குப் பொருட்களாக ஆவணங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.


எஞ்சிய கஞ்சா செடிகள்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமாரவுக்கு அனுப்பி வைப்பதற்காக அத்திமலை  பொலிஸில் மூட்டையாக கட்டப்பட்டு, பின்னர் அத்திமலை பொலிஸ் ஜீப் மூலம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு  கொண்டு செல்லப்பட்டதாக  தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


அந்த கஞ்சா செடிகள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், அத்திமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் எந்த எழுத்து பூர்வ ஆவணத்தையும் பெறாது விடுமுறையில் செல்ல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சிசில குமார அனுமதித்துள்ளார்.


அதன்படி வழக்குப் பொருட்களாக பொலிஸ் புத்தகத்தில் பதிவுச் செய்யப்பட்ட 230 கஞ்சா செடிகளை மட்டுமேனும்  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அத்திமலை பொலிஸ் பொறுப்பதிகாரி விடுமுறையில் சென்றுள்ளார்.


 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார  கைது செய்யப்பட்ட போதும், அத்திமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கடமைக்கு சமூகமளித்திருக்கவில்லை.  இது குறித்து  விசாரணையாளர்கள் அவதானம் செலுத்தி அவரைக் கைது செய்துள்ளனர்.   குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரியை அச்சுறுத்தி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பல்வேறு சட்ட விரோத செயல்களை செய்துகொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சி.ஐ.டி.யினர் அது குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளனர்.


இந்நிலையில் சுற்றிவளைப்பு அதிகாரிகள் உழவு இயந்திரத்தில்  கஞ்சா செடிகளை அனுப்பியமை குறித்து தகவல்கள் உள்ள போதிலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 650  கஞ்சா செடிகளே காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


அவை கிட்டத்தட்ட 22.2  கிலோ என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அவ்வாறாயின் எஞ்சிய கஞ்சா தொகை எங்கே, அவற்றுக்கு என்ன நடந்தது என்பது குறித்தும் விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. உள்ளக தகவல்கள் தெரிவித்தன.


 அதன்படி இதுவரை இந்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் சி.ஐ.டி. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »