Our Feeds


Friday, January 27, 2023

ShortNews Admin

பிரதிவாதிகளுக்கான கூண்டில் ஏற மறுத்த மைத்திரி - நீதிபதி கண்டனம்.



கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விசாரணை இன்று இடம்பெற்ற வேளையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதிவாதிகளுக்கான கூண்டில் ஏற மறுத்துள்ளார்.


இதற்கு கொழும்பு – கோட்டை நீதவான் திலின கமகே மைத்திரியை கண்டித்துள்ளார்.


இதனை அடுத்து அவர் பிரதிவாதி கூண்டில் ஏறியதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை தடுக்க தவறியமை தொடர்பில் பாதிரியார் சிரில் காமினி உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே இந்த கண்டிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதிவாதி கூண்டில் ஏறாது, அதற்கு வெளியே நின்றதை அவதானித்த முறைப்பாட்டு தரப்பு சட்டத்தரணி ரியென்சி ஹர்சகுலரத்ன நீதிமன்றத்தின் கவனத்திற்கு அதனை கொண்டு சென்றார்.


எனினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா,


“தமது கட்சிக்காரர் சார்பில் தொடரப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, எதிர்கால செயற்பாடுகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, அவர் சாட்சி கூண்டில் ஏற வேண்டிய அவசியமில்லை” என்று சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.


மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் பிரதிவாதியான மைத்திரிபால சிறிசேன மீதான வழக்கு நடவடிக்கைகளை தற்காலிகமாக முன்கொண்டு செல்வதில்லை என அறிவித்துள்ள போதும், பிரதிவாதி, கூண்டில் ஏற வேண்டியதில்லை என எந்த இடத்திலும் கூறவில்லை என்று கொழும்பு – கோட்டை நீதவான் திலின கமகே குறிப்பிட்டார்.


இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி சாட்சிகூண்டில் ஏறியுள்ளார்.


இந்த வழக்கு மீதான விசாரணை மீண்டும் மார்ச் 17 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »