அரச மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் அரசியலமைப்பு சபையுடன் தொடர்புடைய நிறுவனங்களின் சொத்துக்களை தேர்தல் காலப்பகுதிக்குள் சட்டத்திற்கு முரணாக பாவிப்பதை தவிர்த்துக் கொள்வதோடு, தற்போதுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரிகள் , ஊழியர்களை இணைத்துக் கொள்வதை மட்டுப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
கடந்த 4 ஆம் திகதி 340 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்பில் அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து தேர்தல் நடத்தப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கிடையிலான காலப்பகுதி தேர்தலுக்கான காலம் என்று அடையாளப்படுத்தப்படுகிறது.
இந்த காலப்பகுதிக்குள் அரசியல் கட்சிகள் , குழுக்கள் என்பன வேட்பாளர்கள் தொடர்பில் பிரசாரங்கள் மேற்கொள்ளல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு அரச சொத்துக்களை உபயோகிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தேர்தல் இடம்பெறவுள்ள மாவட்டங்களில் அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு பதவி உயர்வு , இடமாற்றம் உள்ளிட்ட செயற்பாடுகளும் மட்டுப்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அரச சொத்துக்களுக்கு பொறுப்பான அமைச்சுக்களின் செயலாளர்கள் , திணைக்கள பிரதானிகள் உள்ளிட்ட அனைவரிடமும் வலியுறுத்துகின்றோம்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் 104 (ஆ) (4) (அ) உறுப்புரைகளுக்கமைய அரச சொத்துக்களை தேர்தல் பிரசார பணிகளுக்காக உபயோகிப்பதற்கு தடை விதிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. குறித்த உறுப்புரையின் (ஆ) பிரிவிற்கமைய ஆணைக்குழுவினால் விதிக்கப்படும் கட்டளைகளுக்கு அனைத்து தரப்பினரும் இணங்க வேண்டும்.
மாறாக அவற்றை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டு , அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஒரு இலட்சம் தண்டப்பணம் அல்லது இரு தண்டனைகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.