முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஏன் இன்னமும் விசாரணைக்கு உட்படுத்தவில்லை என கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம் இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
2022 ஜூலை மாதம் கொழும்பில் ஜனாதிபதியின் இல்லத்தில் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்ட 17.85 மில்லியன் தொடர்பிலான விசாரணைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த பணம் குறித்து முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு விடுக்கப்பட்ட உத்தரவினை நிறைவேற்றாதது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் திலினகமகே முன்னர் இந்த விடயம் விசாரணைக்கு வந்தவேளை இது குறித்த விசாரணையை சிஐடியினரிடம் கையளிக்குமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என விசேட விசாரணை பிரிவின் பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் கோட்டாபய ராஜபக்சவை விசாரணை செய்வதற்கான அனுமதியை கோரியவேளை விசாரணைகள் சிஐடியினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக விசேட விசாரணை பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள நீதவான் விசாரணையை யார் முன்னெடுத்தாலும்; நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகளிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள நீதவான் முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணைகளை மேற்கொள்ளாமல் சிஐடியினரிடம் விசாரணைகளை கையளித்தமை குறித்து பொலிஸ்மா அதிபர் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.