மக்கள் போராட்டத்தின் மூலம் வெளியேற்றப்பட்ட ராஜபக்சவினரை மக்கள் ஆணை மூலமாக வெளியேற்றுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
ராஜபக்சவினர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 10 வீதத்துக்கும் குறைவான வாக்குகளை பெறச் செய்ய சகல எதிர்க் கட்சிகளினதும் கடமையாகும். இதற்கான பூரண ஒத்துழைப்பை நாம் வழங்குவோம்.
ராஜபக்சவினரை விரட்டுவதன் மூலமே வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை முழுமையாக மீட்டெடுத்து எழுச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும்.
அதன் முதற்கட்டமாக அவர்களின் ஆரம்ப கோட்டையாகவுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஒழிக்க வேண்டும்.
அத்துடன், அதில் உள்ள ஊழல் புரியும் அரசியல்வாதிகளையும், அரச அதிகாரிகளையும் விரட்டி அடிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் 43 ஆம் படையணியின் தலைவருமான பாட்டலி சம்பின்ன ரணவிக்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
குமார் வெல்கம தலைமையிலான நவ லங்கா சுதந்திர கட்சியுடன் கைகோர்த்துள்ள நாம் எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரையும் சிறிய அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளையும் களறமிறக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.
கொழும்பு - 05 நாரஹேன்பிட்டியிலுள்ள 43 ஆம் படையணியின் தலைமைக் காரியாலத்தில் (18) பிற்பகல் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது இதனை தெரிவித்த அவர் அங்கு மேலும் கூறுகையில்,
"2022, ஏப்ரல் 2 ஆம் திகதியன்று வங்குரோத்து நிலையை அடைந்தாக கூறிய நாடாக தெரிவிப்படுத்தப்பட்டதன் பின்னர் நடத்தப்படுகின்ற முதலாவது தேர்தலாகும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, இவர் எமது பிரதேசத்தைச் சேர்ந்தவர், அவர், எம்மை பிரதிநிதித்துவச் செய்பவர் என பலர் கூறுவர். அதில் ஒரு உண்மை இருக்கின்றது என்றபோதிலும், இந்த தேர்தலின் மூலமாக மிகப் பெரிய பாடத்தை கற்பிக்கக்கூடிய சந்தர்ப்பமொன்று மக்களுக்கு கிடைத்துள்ளது.
நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ராஜபக்சவினரை, அவர்களுடன் ஒன்றாகப் பிண்ணிப்பிணைந்த அரச அதிகாரிகள், ஊழல் அரசியல்வாதிகள் ஆகியோரை மக்கள் ஆணையுடன் தோற்கடிப்பதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஆகவே, தங்களுக்கு மிகப் பெரிய சக்தி உள்ளதாக கூறுகின்ற, 70 இலட்சம் மக்களின் ஆதரவு இருப்பதாக கூறுகின்றவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்சவினரும், அவர்களது பின் திரிபவர்களும் பின்வாசல் வழியாக உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகித்து வருகின்றனர்.
மாகாண சபைகளை ஆளுநர்கள் ஊடாக நிர்வகித்து வருவதுடன், பாராளுமன்றையும் தமது அதிகாரத்தில் வைத்துள்ளனர். மேலும், பாராளுமன்றின் ஊடாக ஜனாதிபதியையும் பின்வாசல் வழியாக கொண்டு வந்துள்ளர். இவ்வாறு, பின்வாசல் வழியாக வந்துள்ள அரசாங்கத்தை மக்கள் விரட்டியடிக்க வேண்டும்.
ராஜபக்சவினரின் உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள உறுப்பினர்கள் பலரும் மணல், கருங்கற்கள் கடத்தல்காரர்களாகவும், மதுபான,போதைப்பொருள் வர்த்தகர்களாகவும் உள்ளனர். இவ்வாறானவர்களை அரசியல் களத்திலிருந்து விரட்டியடிப்பது அத்தியாவசியமானதாகும்.
சரியான அரசியல்வாதிகள் தெரிவு செய்யப்படும்போது, தத்தமது பகுதியையும், கிராமத்தையும், நகரத்தையும் அபிவிருத்தியடைச் செய்ய முடியும். அத்துடன், அவர்களால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் கண்காணிப்பதற்கான பின்புலத்தை அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும்" என்றார்.