Our Feeds


Sunday, January 8, 2023

ShortNews Admin

ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை முடக்க தமிழகத் தலைவர்கள் துணைபோக வேண்டாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்



(நமது நிருபர்)


ற்றையாட்சிக்குள் தமிழர்களை முடக்கும் நிலைப்பாட்டுக்கு துணைபோகாமல், ஈழத்தமிழர் நலன்சார் விடயத்தில் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டுமென தமிழக தலைவர்களிடத்தில் விநயமாக கோருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பானது நேற்று சனிக்கிழமை (ஜன. 7) கொக்குவிலில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சென்னையில் நேற்றைய தினம் தொல்.திருமாவளவன் மற்றும் மகேந்திரன் ஆகியோரின் பங்களிப்புடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.

அவர்கள் இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தக் கோரியதோடு 13ஆம் திருத்தச்சட்டம் தமிழ் மக்களுக்குரிய தீர்வல்ல என்றும் வலியுறுத்தினர்.

எம்மை பொறுத்தவரை சுமந்திரனின் இக்கருத்து ஆச்சரியமல்ல. சுமந்திரன் திட்டமிட்டு தமிழ்த் தேசிய அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டவர். ஆனால், திருமாவளவன் மகேந்திரன் போன்றவர்கள் ஈழப் போராட்டத்தின்போது ஈழத்தமிழர்களுக்காக உறுதியாக குரல்கொடுத்தவர்கள். 

போராட்ட காலத்துக்கு முன்னர் இவர்கள் இருவரின் வாயால் கூட 13ஆம் திருத்தச் சட்டமும் மாகாண சபை முறைமையும் தீர்வு என்று உச்சரித்ததை நான் அறியவில்லை.

அவர்கள் இந்த 13ஆம் திருத்தச்சட்டத்தை அமுலாக்குமாறு மத்திய அரசை கோரும் கருத்தானது எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. 

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் சந்திரசேகரன் ஐயா ஈழப் போராட்டத்தை மிகவும் நேசித்தவர். அவர்களின் கட்சியினரும் தனித்துவமாக ஈழத்தமிழர்களுக்காக செயற்பட்டவர். அப்படிப்பட்ட கட்சியில் இருந்துவந்த இராதாகிருஷ்ணன் 13ஆம் திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தும் செயற்பாடானது வெறுப்புக்குரியது.

இந்தியாவின் மத்திய அரசு 13ஆம் திருத்தச்சட்டம் தமிழர்களுக்கு இறுதித் தீர்வு என்ற நிலை இன்று வரை தொடர்கிறது. இன விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப்புலிகள் 13ஆம் திருத்தச்சட்டத்தை தீர்வுக்கான ஓர் ஆரம்பப்புள்ளியாகக் கூட கருத மறுத்தனர். அதனால் தான் 30 வருடங்கள் போராட்டம் நடைபெற்றது. 

அவ்வாறிருக்கையில், அதனை ஆரம்பப் முள்ளியாகக் கருதினால் தமிழர் தரப்பு ஒற்றையாட்சிக்குள் முடங்கிவிடும்.

இதுவரைக்கும் தமிழர் சரித்திரத்திலே ஒற்றையாட்சி முறை கொண்டுவந்த நிலையில் தமிழர் தரப்பு நிராகரித்ததாலேயே இன்று வரை இலங்கையில் இனப்பிரச்சினை காணப்படுகிறது. 13ஐ ஆரம்பப்புள்ளியாக வலியுறுத்தும் தமிழர் தலைவர்கள் என்று கூறுபவர்கள் அரசின் அடிமையாக செயற்பட்டாலும், இன்று தமிழர் போராட்டத்துக்கு பக்கபலமாக செயலாற்றிய தமிழகத் தலைவர்கள் நிலைமாறியுள்ளனர்.

திருமாவளவன், மகேந்திரன் போன்றோர் இவ்வாறு செயற்படுவது தமிழர்களின் விடயத்தில் ஏமாற்றமளிக்கிறது. அவர்களிடம் ஒற்றையாட்சிக்குள் முடக்கும் 13ஆம் திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளிக்காமல் கடந்த 35 வருடங்களாக தமிழர் நலன் சார்பில் எவ்வாறு செயற்பட்டீர்களோ, அந்த நிலையில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கெஞ்சிக் கேட்கிறோம்.

புலம்பெயர் தேசத்தில் வாழும் உறவுகள் எவ்வாறு தமிழர் தரப்பின் மீது கரிசனையுடன் உள்ளனரோ அதுபோலவே தமிழக தலைவர்களும் செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »