Our Feeds


Tuesday, January 10, 2023

Anonymous

நிலந்தவின் பதவி உயர்வு ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதி - பாதிரியார் சிறில் காமினி

 



(எம்.எம்.சில்வெஸ்டர்)


பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் நிலந்த ஜயவர்னவுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளமையானது, நீதியை வேண்டி நிற்கும் பொது மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகச் செயலாகும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பலியான மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் செய்துள்ள மாபெரும் அநீதியாகும் என கொழும்பு மறை மாவட்ட ஞானார்த்தய பத்திரிகையின் ஆசிரியரான அருட்தந்தை சிறில் காமினி அடிகளார் குற்றம் சாட்டினார்.

தற்போதுள்ள அரசாங்கமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் செய்துகொண்டிருப்பது குற்றவாளிகளை பாதுகாப்பதுடன், உயிர்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்புலத்தில் உள்ள சதித்திட்டங்களை மறைப்பதும் அவமதிக்கின்ற விடயமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.   

கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று காலை நடைபெற்ற  ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

"பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் நிலந்த ஜயவர்தன குறித்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டிருந்த பரிந்துரைகளை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.

பொலிஸ் திணைக்களத்தினாலும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காது பொலிஸ் மா அதிபருக்கு அடுத்த பதவியை அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளமை ஒட்டு மொத்த பொலிஸ் திணைக்களத்தையும் அவமதிக்கும் செயலாகும்.

இவ்வாறு நிலந்த ஜயவர்தனவுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதானது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மையை மறைப்பதற்காகவும், அவருக்கு அதற்கான அதிகாரத்தை வழங்கியுள்ள ஓர் விடயமாகவே எங்களுக்கு புலப்படுகிறது. 

ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது, பொருளாதார அபிவிருத்தி மாத்திரம் அல்ல. நீதி, நியாயம் எவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் இவை மிகவும் முக்கியமான விடயமாகும். இருந்தாலும், அவை நடக்காமலிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. 

இது போன்ற பதவிகள் வழங்கப்படுவதன் ஊடாக நாட்டின் நீதித்துறை சவாலுக்கு உட்படுத்தப்படுவது போலவே இலகுவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இதுபோன்ற அசாதாரண மற்றும் அரசியல் ரீதியான நியமனங்களால், சர்வதேச நாடுகளின் முன்னிலையில் மிகவும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுவதுடன், எமது நாட்டுக்கு அவப்பெயரை  ஏற்படுத்தும்.  இதற்கு தற்போதைய ஜனாதிபதியும், அரசாங்கமும் பூரண பொறுப்பை ஏற்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தடுப்பதற்கு பல்வேறு தடவைகள் இந்திய புலனாய்வு பிரிவினரால், நிலந்த ஜயவர்தனவுக்கு புலனாய்வுத் தகவல்கள்  கிடைத்திருப்பினும், அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்துள்ளார் என்பது ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் தெரிய வந்தது.

இருப்பினும், அவருக்கு எதிராக நடவடிக்கைகளை சட்ட நடவடிக்கை எடுக்காது பதவு உயர்வுகளை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நிலந்த ஜயவர்தனவுக்கு பொலிஸ் மா அதிபர் பதவி வழங்கப்படுவதற்கான நடவடிக்ககைள் எடுக்கப்பட்டு வருகின்றதா என பாராளுமன்ற  உறுப்பினர் முஜிபுர் ரஹுமான்  பாராளுமன்றில் கேள்வியெழுப்பிருந்தபோதிலும், அதற்கு பொறுப்பான அமைச்சர்களும், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் பதிலளிக்காது இருந்தமையும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்"  என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »