Our Feeds


Friday, January 13, 2023

ShortNews Admin

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் வீதி நாடகம்!



அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடன் குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் இணைந்து வீதி நாடகமொன்றினை யாழ் பல்கலைக்கழகத்தினுள் முன்னெடுத்தனர். இன்று காலை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூட வளாகத்திற்கு முன்பாக  குறித்த  விழிப்புணர்வு வீதி நாடகம் முன்னெடுக்கப்பட்டது.


இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன்,  இந்த முறை தைப்பொங்கலுக்கு எமது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்பிய பொழுதும் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்.

இதனை மையப்படுத்தியே இவ்வாறு சிறைக்கூண்டு அமைக்கப்பட்டு சிறையிலுள்ள கைதிகளை போல உருவகித்து பொங்கல் பொருட்கள் வீடுகளில் தயார் நிலையில் உள்ள போதும் இம்முறையும் எமது உறவுகள் இன்றி பொங்கலை பொங்கமுடியாத சூழலை வெளிப்படுத்துமுகமாக இதனை நாம் நாடகமாக நிகழ்த்திக்காட்டியிருந்தோம்.


மேலும் அரசியல் கைதிகள் விடுதலையின்றி வாழும் சூழலில் இங்கு நடைபெற இருக்கின்ற தேசிய பொங்கல் விழாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தரும் பொழுது எமது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் பிரிதிநிதிகள் குறித்த நிகழ்வை முற்றாக நிராகரிக்கவேண்டும். இதே நேரம் எஞ்சிய சிறைக் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் என வலியுறுத்தினார்.


இதன்பொழுது குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன்,யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார்,செயலாளர் யாமீன்,கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் ஜெல்சின், முன்னாள் அரசியல் கைதிகள், மாணவர்கள்,கல்விசாரா ஊழியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »