Our Feeds


Monday, January 9, 2023

ShortNews Admin

உள்ளாட்சித் தேர்தலில் மூன்று விதமாக போட்டியிடத் தயாரானது முஸ்லிம் காங்கிரஸ்



எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் தனித்தும், ஐக்கிய மக்கள் சக்தியுடனும், வேறு கட்சிகளுடன் இணைந்தும் மூன்று விதமாகப் போட்டியிடவுள்ளது.


உள்ளூராட்சி மன்றங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸின் ஊடாகப் போட்டியிடுவதற்கு  தற்போதைய உறுப்பினர்களுக்கு மேலதிகமாக இளைஞர்கள், பெண்கள் ஆகியோரை உட்படுத்த, கட்சி விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

அவை செயலாளருக்கும், தேசிய அமைப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
அநுராதபுர மாவட்டத்தின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று தாருஸ்ஸலாம் தலைமையகத்தில்  வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்றது

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கும் கலந்து கொண்டார்.

இதன்போது அநுராதபுர மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதையே பெரும்பாலானோர் வலியுறுத்தினர். 

போட்டியிடும் உள்ளுராட்சி மன்றங்கள் அவற்றில் கட்சிக்கு வழங்கப்படும் வட்டார மற்றும் ஆசன ஒதுக்கீடுகள் என்பவற்றைப் பொறுத்தான ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவத்துடனான பேச்சுவார்த்தையின் பின்னர், இதுபற்றிய இறுதித் தீர்மானம் விரைவில் மேற்கொள்ளப்படுமென தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறிருக்க, பிரஸ்தாப தேர்தல் தொடர்பில் கொழும்பு மாநகர சபை உட்பட கொழும்பு, புத்தளம், பதுளை, குருநாகல், கம்பஹா, புத்தளம், வன்னி, கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான சந்திப்புகளும் கட்சித் தலைவர் ஹக்கீமுடன் தனித்தனியாக இடம்பெற்றதுடன், இவற்றிலும் கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்எஸ்.தௌபீக் எம்.பி.கலந்துகொண்டார்.

அத்துடன், இந்தத் தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட நிர்வாக உத்தியோகர்களுடனான கலந்துரையாடலும் வெள்ளிக்கிழமை (06) மாலை தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோர் முன்னிலையில்"கட்சியின் தாருஸ் ஸலாம்"தலைமையகத்தில் நடைபெற்றது.

கண்டி மாவட்டத்துக்கான கலந்துரையாடல் கட்சித் தலைவர் ஹக்கீம் தலைமையில் சனிக்கிழமை (07) கண்டி நகரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »