இலங்கையிலிருந்து இந்தியா சென்ற இரு பெண்கள் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சுமார் ஒரு கோடி 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்திச்சென்றதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, இலங்கையிலிருந்து சென்னை சென்ற விமானத்தில் பயணித்த 2 இலங்கை பெண்கள் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டனர். அத்துடன், அவர்களது உடைமைகளை சோதனை செய்யப்பட்டதுடன், பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனையிடப்பட்டனர்.
இதன்போது 2 பெண்களும் தமது உள்ளாடைகளில் மறைத்து வைத்து கடத்திச் சென்ற தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து 25 இலட்சத்து 73 ஆயிரம் இந்திய ரூபா (சுமார் 1.1 கோடி இலங்கை ரூபா) மதிப்புள்ள 516 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பில் மேற்படி 2 பெண்களையும் கைது செய்த தமிழக சுங்க அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.