றிப்தி அலி
‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி” என்பது ஒரு நகைச்சுவையுடனான சிற்றரசு ஒன்றை மையப்படுத்திய திரைப்படம். இந்த திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அண்ணன் பாத்திரத்தில் நடித்த வடிவேலு மன்னன் 23 ஆம் புலிகேசி.
இவர் ஆங்கிலேயருக்கு ஆதரவான நிலைப்பாட்டையுடையவராக இருப்பதாக கதை சித்திரிக்கப்பட்டிருக்கும். 23 ஆம் புலிகேசியின் மந்திரியாக நடிகர் இளவரசு நடித்திருப்பார். இந்த நகைச்சுவை திரைப்படத்தில் மன்னரின் பிழையான தீர்மானத்திற்கெல்லாம் தலையசைக்கும் பாத்திரத்தில் இருக்கும் மந்திரியாரை அடிக்கொருமுறை ‘மங்குணி மந்திரி என்று மணிக்கொரு தடவை நிரூபித்துக்கொண்டிருக்கிறாய்” என்ற வசனத்தை வடிவேலு கூறுவதை இலங்கையில் தேர்தல் காலம் வரும்போதெல்லாம் முஸ்லிம் அரசியல் வாதிகளை பார்த்துச் சொல்லத் தோன்றும்.
அந்த வசனத்தை கொஞ்சம் திருத்தி, ‘மங்குணி மந்திரிகள் என்பதை ஒவ்வொரு வாக்கெடுப்புகள் வரும்போதும் நிரூபித்துக்கொண்டிருக்கிறாய்” என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
ஏனென்றால், பாராளுமன்றில் இடம்பெறும் வாக்கெடுப்புகளாக இருக்கட்டும், தேர்தல் காலங்கள் ஆரம்பிக்கட்டும், குறைந்தது முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரேனும் ஏதோ ஒருவகையில் கட்சி மாறுபவர்களாகவும், கொள்கையை மாற்றிக்கொள்பவர்களாகவும், வாக்குறுதியை மீறுபவர்களாகவுமே காலா காலமாக இருந்து வந்திருக்கின்றனர். இதனால்தான் நீண்டகாலமாக ‘தொப்பி புரட்டிகள்” என்று முஸ்லிம் அரசியல் தலைமைகளை பார்த்து பிற சமூக அரசியல்வாதிகள் எள்ளி நகையாடுவதை காண்கிறோம்.
இந்த பின்னணியில்தான் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டதன் பின்னர் பல கட்சித் தாவல் நாடகங்கள் முஸ்லிம் அரசியல் அரங்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. உள்ளுர் அரசியல்வாதிகள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக, மாகாண சபை உறுப்பினர்களாக இருந்தவர்களும் இப்போது கட்சி தாவ ஆரம்பித்திருக்கின்றனர்.
இதில் பிரதானமாக, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மு.கா.வில் இணைந்தமை, சம்மாந்துறை தவிசாளர் நௌஷாட் பதவி விலகியமை, ஹரீஸ் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டமை, முஸர்ரபின் தேர்தல் நடவடிக்கை, அமைச்சர் ஹாபிஸ் நசீரின் அரசியல் நகர்வுகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரினதும் காய் நகர்த்தல்கள் உள்ளிட்ட பல அரசியல் செயற்பாடுகளை சுட்டிக்காட்ட முடியும்.
இந் நிலையில்தான், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணைந்துகொண்டுள்ளார்.
1989ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக பாராளுமன்றம் நுழைந்த இவர், மாகாண ஆளுநர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர் போன்ற பல பதவிகளை வகித்துள்ளார்.
அது மாத்திரமல்லாமல், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் இவர் போட்டியிட்டார். 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு சில தினங்களுக்கு முன்னர், இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றார்.
இதன் பின்னர், அகில இங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஹிஸ்புல்லா அரசியல் பணிகளை முன்னெடுத்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு நேரடி அரசியல் எதிரியாக செயற்பட்ட இவர், மீண்டும் அக்கட்சியில் இணைந்துகொண்டுள்ளமை இன்று சமூக ஊடகங்களில் பாரிய விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
குறிப்பாக ஹிஸ்புல்லாவினை கட்சியில் இணைத்துக்கொண்டமைக்காவும், ஹிஸ்புல்லாஹ் இணைந்துகொண்டமை தொடர்பிலும் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் கொள்கையற்று தங்களின் சுயநலங்களுக்காகவே அரசியலில் ஈடுபடுகின்றனர் என்பது இதன் ஊடாகத் தெளிவாகின்றது. இதற்கு பாடம்புகட்டவுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தாலும், தேர்தல் காலங்களில் கொள்கையற்ற அரசியல்வாதிகளுக்கே தொடர்ந்தும் வாக்களித்து வருகின்றமை கவலைக்குரியதாகும்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து, முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு மறைமுக அனுமதியை வழங்கிய ஏழு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று மக்களுடன் மக்களாக இணைவதற்கு முயற்சிக்கின்றனர்.
ஜனாஸாக்களை எரித்த அரசுக்கு துணைபோனமைக்காக இன்று வரை இவர்களில் ஒருவராவது பகிரங்க மன்னிப்புக் கோரவில்லை. மாறாக தாம் செய்தது சரி என நிரூபிப்பது போலவே செயற்பட்டு வருகின்றனர்.
அது மாத்திரமல்லால், இவர்களுக்கு எதிராக இவர்கள் சார்ந்த கட்சிகளினால் இன்று வரை ஆக்கபூர்வமான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல், மீண்டும் கட்சிகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கடந்த வருடம் புத்தளத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம். ஹரீஸ், எழுத்து மூலம் மன்னிப்புக் கோரினால் மாத்திரமே மீண்டும் கட்சிக்குள் இணைந்துகொள்ளப்படுவார் என அறிவிக்கப்பட்டது. எனினும், இன்று வரை எழுத்து மூலம் மன்னிப்புக் கோராத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு கட்சிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இதே போன்றே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவும் இக்கட்சியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளர் அப்துல் ஹை மற்றும் மஜ்லிஸுல் சூராவின் பிரதித் தலைவர் முஹம்மத் சியாத் ஆகியோர் இக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று இன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக செயற்படும் ஹாபீஸ் நசீர்; அஹமதின் இணைப்புச் செயலாளர்களாக செயற்படுகின்றனர்.
எனினும், இவர்களுக்கு எதிராக இன்று வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமின் அனுமதியுடனே குறித்த பதவியினை தாம் பொறுப்பேற்றுள்ளதாக அவர்கள் கூறி வருகின்றனர்.
இதேவேளை, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தினை முஸ்லிம்கள் கைப்பற்ற வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினராக இருந்த சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எம். நௌசாத் பிரசாரத்தினை முன்னெடுத்திருந்தார். இன்று அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.முஷாரபுடன் கூட்டமைத்து மீண்டும் சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் களமிறங்கத் தயாராகி வருகின்றார்.
இவ்வாறு முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று தங்களின் கொள்கைகளை மறந்து அற்ப சொற்ப நலன்களுக்காக தினம் தினம் கொள்கைகளை மாற்றி வருகின்றனர்.
இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு சிறந்த பாடம் புகட்ட வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் கடமையாகும். எனினும், இதனை மறந்த முஸ்லிம் சமூகம் குறித்த அரசியல்வாதிகளை மீண்டும், மீண்டும் தெரிவுசெய்து கைசேதப்படுகின்றது.
இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினை விழிப்புணர்வூட்ட வேண்டிய புத்திஜீவிகளும், கொள்கையற்ற அரசியல்வாதிகளின் முகவர்களாக செயற்படுவதும் மற்றொரு கவலையளிக்கும் செயற்பாடாகும்.
எவ்வாறாயினும், கொள்கையற்ற அரசியல்வாதிகளுக்கும், கட்சிகளுக்கும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிறந்த பாடம் புகட்ட வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் தலையாய கடமையாகும்.- Vidivelli