(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான ஜெஸ்வெல் பிளேஸ் சந்தியில் பாதுகாப்பு கடமையின் இடையே பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவர் ஒருவர், ரி 56 ரக துப்பாக்கியால் சக பொலிஸ் சார்ஜன்ட் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல் - பொல்பிட்டிகமவை சேர்ந்த 25 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மிரிஹானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ்கான்ஸ்டபிள் ஒருவர், பழைய கொட்டாவ வீதியில் உள்ள ஜெஸ்வெல் சந்தியில் மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன் உள்ளிட்டோருடன் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்துக்கு செல்லும் வீதி என்பதால் அங்கு குறித்த பாதுகாப்பு கடமை 24 மணி நேரமும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
இந் நிலையில் பொலிஸ் காண்ஸ்டபிள் கடமையில் ஈடுபட்டிருந்த போது உறங்கி விட்டதாகவும் பொலிஸ் சார்ஜன் அது தொடர்பில் அவருக்கு கடமையில் அக்கறையுடன் செயற்படுமாறு ஞாபகப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்துள்ள பொலிஸ் கான்ஸ்டபிள், பொறுமை இழந்து, சார்ஜன்ட்டை நோக்கி தனது துப்பாக்கியை குறிவைத்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் எந்தவொரு சேதமும் நிகழும் முன், குறித்த ஆயுதம் உடனடியாக பொறுப்பாக இருந்த பொலிஸ் பரிசோதகரால் பறிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து சிரேஷ்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, குரித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நுகேகொட - கங்கொடவில நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மிரிஹானை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.