(எம்.வை.எம்.சியாம்)
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான முகவர் நிறுவனங்களுக்கு பணம் மற்றும் கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் குறித்த நிறுவனங்கள் தொடர்பில் தகவல்களை பெறுமாறும் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 24 மணித்தியால தகவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையதளத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட முகவர் நிலையத்தின் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு துபாயில் தொழில் வழங்குவதாகக் கூறி 450,000 ரூபா பெற்றுக்கொடுத்து வேலை வழங்கவில்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளரும் முகாமையாளரும் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு வந்து சரணடைந்ததுடன் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரிடமிருந்து பெறப்பட்ட 450,000 ரூபா பணத்தை இரண்டு தவணைகளில் திருப்பிச் செலுத்துமாறு உரிமையாளர் மற்றும் முகாமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குவைத் உள்ள பண்ணை ஒன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 06 இலங்கை இளைஞர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்குத் அவர்கள் தெரியப்படுத்தியதையடுத்து சம்பந்தப்பட்டவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் திருகோணமலை மற்றும் கிண்ணியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
குறித்த குழுவினர் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள சட்டவிரோத தரகர் ஒருவரின் ஊடாக குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.