(எம்.மனோசித்ரா)
ஜே.வி.பி கூறுவதை போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தினால் ஆஜன்டினாவை போன்ற நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும். அத்தோடு நட்பு நாடுகளான சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து கூட கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய அவசியம் இல்லை என்று ஜே.வி.பி. கூறுகின்றது. அவ்வாறெனில், அதற்கான மாற்றுவழி என்ன என்பதையும் அவர்கள் முன்வைக்க வேண்டும்.
அதனை விடுத்து குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தினால் ஆஜன்டினாவுக்கு ஏற்பட்ட நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், இலங்கை கடன் நிலைபேற்றுத் தன்மையற்ற நாடாக கருதப்படும்.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால், நட்பு நாடுகளாக காணப்படுகின்ற போதிலும், இந்தியா மற்றும் சீனாவிடமிருந்து கூட எம்மால் ஒத்துழைப்புக்களை பெற முடியாது. சட்ட ரீதியாக அந்த நாடுகளுக்கு எம்மால் உதவ முடியாது.
எனவே, கடன் நிலைபேற்றுத் தன்மையை பேணுவதற்கு அதற்குரிய பொருளாதார வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அதன் அடிப்படையிலேயே சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதோடு, வரவு - செலவு திட்டமும் முன்வைக்கப்பட்டது.
இதனை அடிப்படையாக கொண்டே இந்தியாவும் கடன் மறுசீரமைப்புக்கு எழுத்து மூலம் இணக்கம் தெரிவித்தது.
நாணய நிதியத்தை நாட வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்ற போதிலும், அவர்களின் சகல நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும் என்று கூறவில்லை. உதாரணமாக, வருமான வரி 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கான மாற்று வேலைத்திட்டம் எம்மிடமுள்ளது. எமது ஆட்சியில் நிச்சயம் இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
கடந்த 2020ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிகள் ஆரம்பமானபோதே சர்வதேச நாணய நிதியத்துக்குச் சென்றிருந்தால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருக்காது என்றார்.