சீனாவில் இரசாயன தொழிற்சாலையில் இடம் பெற்ற பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் கிழக்கு லியோனிங் மாகாணம் பான்ஜின் நகரில் இரசாயனங்களை உற்பத்தி செய்யும்தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை பயங்கர வெடிவிபத்து நேரிட்டது. இதில் வானுயரத்துக்கு தீப்பிழம்பு எழுந்தது. அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. மேலும் வெடிவிபத்தை தொடர்ந்து தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கினர்.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கினர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் அவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.
34 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைகளில அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் 8 பேர் இடிபாடுகளில் சிக்கி மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.