(எம்.மனோசித்ரா)
கல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமெனில் 5 பில்லியன் ரூபா தேவையென அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
மின்கட்டண அதிகரிப்பிற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதுவரையில் அனுமதி வழங்காத நிலையில் , பாரதூரமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (ஜன 17) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தனக்கோ அல்லது அமைச்சரவைக்கோ பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதுவரை எந்தவொரு பரிந்துரைகளையும் முன்வைக்கவில்லை என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு அறிவித்தார்.
மின் கட்டண அதிகரிப்பிற்கு கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்த நிலையில் , பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
கட்டண அதிகரிப்பின்றி எவ்வாறு தொடர்ச்சியாக மின் விநியோகத்தை வழங்குவது என்பது புரியாமலிருப்பதாகவும் அமைச்சர் காஞ்சன அமைச்சரவையில் தெரிவித்தார்.
இலங்கை மின்சாரசபையினால் , பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 106 பில்லியன் ரூபா செலுத்தப்பட வேண்டியுள்ளது.
மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு 50 பில்லியன் ரூபாவையும் மின்சாரசபை செலுத்த வேண்டியுள்ளது.
ஜனவரியில் நிலக்கரி கொள்வனவிற்காக 38.4 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளதாகவும் , பெப்ரவரியில் 31.6 பில்லியன் செலுத்த வேண்டியுள்ளதாகவும் மின்சாரசபை அறிவித்துள்ளது.
இவை உள்ளிட்ட ஏனைய செலுத்தப்பட வேண்டியுள்ள தொகையையும் சேர்த்து மின்சாரசபையின் ஒட்டுமொத்த செலவு 325 பில்லியன் ரூபாவாகும்.
உயர்தர பரீட்சைகள் இடம்பெறவுள்ள 14 நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்த வேண்டாம் என்று கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த 14 நாட்களுக்கும் துண்டிப்பின்றி மின்சாரத்தை வழங்குவதற்கு 5 பில்லியன் ரூபா தேவையாகும். அதாவது தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கு நாளொன்றுக்கு 357 மில்லியன் ரூபா தேவையாகும்.
எவ்வாறிருப்பினும் எந்த வகையிலாவது பரீட்சைகள் இடம்பெறும் போது மின்சாரத்தை துண்டிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் காஞ்சன குறிப்பிட்டுள்ளார் என்றார்.