Our Feeds


Tuesday, January 17, 2023

ShortNews Admin

மே 9 சம்பவங்கள் - சவேந்திர, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 18 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு!



(எம்.எப்.எம்.பஸீர்)


முன்னாள் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரால் சவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உளிட்ட 18 பேருக்கு மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்க  இன்று (16) அறிவித்தல்  அனுப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இவ்வாறு மேன் முறையீட்டு நீதிமன்றில் விளக்கமளிக்க இந்த அறிவித்தல் அனுப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் கடந்த மே 9 ஆம் திகதி  தாக்கி எரிக்கப்பட்ட  சம்பவங்கள்  குறித்து விசாரணை நடத்தி, குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பொலிஸ்  மா அதிபர்  உள்ளிட்ட  பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை (ரிட்) மனுவை இன்று (16) ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றால் பரிசீலிக்கப்பட்டது. இதன்போதே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டது.

மே 9 சம்பவங்களில் வீடுகளை இழந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, ஜனக பண்டார தென்னக்கோன், பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர, சிறிபால கம்லத், எஸ், எம், சந்திரசேன, ஷெஹான் சேமசிங்க, ரோஹித அபேகுணவர்தன, கோகிலா குணவர்தன, சஹான் பிரதீப் உள்ளிட்ட 39 பேர்  இணைந்து இம்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி, முன்னாள் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி சவேந்திர சில்வா, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், பொது மக்கள் பாதுகாப்புஅமைச்சின் செயலாளர் உள்ளிட்ட 18 பேர் இம்மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அரசியல்வாதிகளின் வீடுகளைத் தாக்கி தீ வைத்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அட்மிரல் ஒப் த ப்ளீட்  வசந்த கர்ணாகொட, மார்ஷல் ஒப் தெ எயர் போர்ஸ், ரொஷான் குணதிலக்க மற்றும் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டதாக மனுதாரர்களான அரசியல்வாதிகள் குறித்த ரிட் மனுவில் தெரிவித்துள்ளனர்.

மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னணியில் சதி இருப்பதாக அக்குழு கண்டறிந்துள்ளதாகவும், இது தொடர்பில் மேலும் பல பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படவில்லை எனவும்  குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்  நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காத பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது குற்றவியல் மற்றும் இராணுவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.

 அத்துடன் சம்பவம் இடம்பெறும் போது, பாதுகாப்பு படைகளின்  தலைமை அதிகாரியாக செயற்பட்ட ஜெனரால் சவேந்திர சில்வாவின்  நடவடிக்கை சந்தேகத்துக்குரியதாக இருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கரன்னாகொட குழுவின் அறிக்கையை மையப்படுத்திஇந்த சந்தேகம் மனுவில் எழுப்பட்டுள்ளது.

இந்த மனு  மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான  சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன  ஆஜராகி விடயங்களை முன் வைத்த நிலையில், பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »