Our Feeds


Sunday, January 22, 2023

ShortNews Admin

மஹிந்த , கோட்டா உள்ளிட்ட நால்வர் மீதான தொடர்ச்சியான தடைக்கு ஜி 7 நாடுகளையும் இணைத்துக்கொள்ள முயற்சிக்கிறது கனடா



(எம்.மனோசித்ரா)


முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியான தடையை விதிப்பதற்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சிகளில் கனடா ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுகள் அமைச்சர் மெலின் ஜோலி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட சிவில் யுத்தத்தின் போது மனித உரிமைகளை மீறில்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி அண்மையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகிய நால்வருக்கு எதிராக கனேடிய அரசாங்கம் பல்வேறு முக்கிய தடைகளை விதித்தது.

இந்நிலையிலேயே சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் மெலின் ஜோலி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதன் சுருக்கம் வருமாறு :

கேள்வி : ஜனவரி 10 நான்கு இலங்கையர்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கான காரணம் மற்றும் காலக்கெடு குறித்து இன்னும் தெளிவான புரிதல் இல்லையே?

பதில் : நாம் இது தொடர்பில் ஒரு குறுப்பிட்ட காலத்திற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதைப் போன்றே , நீதி நிலைநாட்டப்படுவது தொடர்பிலும் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம். கனடா அனைத்து சந்தர்ப்பங்களிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக செயற்பட்டு வருகிறது. அதே போன்று கனடா பல வருடங்களாக சர்வதேச ரீதியில் பொறுப்பு கூறல் தொடர்பிலும் கேள்வியெழுப்பியுள்ளது.

அதற்கமைய பொறுப்பு கூறலில் பிரச்சினைகள் காணப்பட்டால் அங்கு சர்வதேச சட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. இதன் காரணமாகவே நாம் ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் ஏனைய இருவருக்கும் தடை விதித்தோம். இதன் ஊடாக கனடாவில் காணப்படும் அவர்களது சொத்துக்களுக்கு தடை விதிப்பதோடு , அவர்களுக்கும் கனடாவிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

கேள்வி : இலங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விட உக்ரேன் போன்ற நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஜி7 நாடுகளின் உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறும். இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஜி7 உறுப்பினர்களை ஊக்குவிப்பதன் மூலம் எவ்வாறான விளைவுகள் ஏற்படும்?

பதில்: இதுவே எமது இலக்காகும். இது தொடர்பில் நாம் அவர்களது கவனத்திற்குக் கொண்டு செல்வோம். இலங்கையிலுள்ள தமிழ் சமூகத்தினர் இதுவே உண்மை என்பதை அறிவார்கள். அமைதியை அடைய , உண்மையை சுட்டிக்காட்ட வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »