மூன்று தங்காபரணங்கள் மற்றும் 7500/- ரூபா பணத்தை கொள்ளையிட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலாலே நேற்று (ஜன.16) தீர்ப்பளித்துள்ளார்.
26 ஆண்டுகளுக்கு முன்பு கத்தி மற்றும் கைத்துப்பாக்கியை காண்பித்து, கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனைக்கு மேலதிகமாக, 40,000 ரூபா அபராதத்தையும் நீதிபதி விதித்துள்ளார்.
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த மஞ்சுள சஞ்சீவா மற்றும் ஜெலாப்தீன் அலி கான் ஆகிய இருவருமே குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
1997ம் ஆண்டு நவம்பர் மாதம் அல்லது அதற்கு அண்மித்த திகதியில், இந்த குற்றச் செயல் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத குழுவொன்றின் உறுப்பினர்கள் ஐவர், கத்தி மற்றும் துப்பாக்கியை காண்பித்து 7500 ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
அத்துடன், மூன்று பெண்களின் 11000 ரூபா, 48000 ரூபா மற்றும் ரூபா 8000 ரூபா பெறுமதியான மூன்று தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இவர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
சட்டமா அதிபர் முதலில் 05 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்த போதிலும், முதலாவது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவர் இல்லாமலேயே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும் வழக்கின் 5ஆவது பிரதிவாதி விசாரணையின் போது மரணமடைந்திருந்தார்.
3வது பிரதிவாதி மீதான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் அரசத் தரப்பு நிரூபிக்கவில்லை எனத் தீர்மானித்த நீதிபதி, அவரை அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட ஏனைய இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகமிடமின்றி நிரூபிக்கப்பட்டமையினால், அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் தலா 20000 ரூபா அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.