அமெரிக்காவில் ஆசிரியை மீது 6 வயது மாணவன் துப்பாக்கி சூட்டை நடத்திய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வேர்ஜினியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிக்நெக் என்ற ஆரம்ப பாடசாலை ஒன்றிலே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையின் 30 வயதுடைய ஆசிரியை ஒருவருக்கும் 6 வயது சிறுவன் ஒருவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
இதில், சிறுவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியையை நோக்கி சுட்டுள்ளான்.
இந்த தாக்குதலில் ஆசிரியை பலத்த காயமடைந்துள்ளார். உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில், அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி காவல் தலைமை அதிகாரி ஸ்டுவ் ட்ரூ கூறும்போது,
6 வயது சிறுவனை பொலிஸ் காவலில் வைத்துள்ளோம். ஆசிரியையைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் வேறு மாணவர்கள் யாருக்கும் தொடர்பு எதுவும் இல்லை. துப்பாக்கி சிறுவனுக்கு எப்படி கிடைத்தது? இதன் பின்னணி என்ன? என்பது பற்றி விசாரிக்க வேண்டி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் எதிரொலியாக, வருகிற திங்கட்கிழமை ஒரு நாள் பாடசாலைக்கு விடுமுறை விடப்படுகிறது.