வர்த்தமானி அறிவித்தலையும் மீறி அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காண்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை அண்மையில் நாடாளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
தெஹிவளையில் பகுதியில் கட்டுப்பாட்டு விலையையும் மீறி அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த வர்த்தக நிலையத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் கொழும்பு பிரதேசங்களுக்கு முட்டைகளை கொண்டு வந்து விநியோகிக்கும் பிரதான வர்த்தக நிறுவனத்திற்கும மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் மொத்த மற்றும் சில்லறை முட்டைகளை விற்பனை செய்யும் கடையொன்றிற்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் நுகர்வோர் விவகார அதிகார சபை கடந்த 20ஆம் திகதி முட்டை விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.
அதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.