(எம்.வை.எம்.சியாம்)
கடல் வழியாக பிரான்ஸின் ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 46 இலங்கையர்கள் விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் 46 இலங்கை பிரஜைகளை கடந்த வெள்ளிக்கிழமை விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
இலங்கையர்கள் குழு கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்கு சட்டவிரோதமாக இடம்பெயர முற்பட்ட போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் கடந்த டிசம்பர் 2 ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து மீன்பிடி இழுவை படகு மூலம் புறப்பட்டனர். பலநாட்களின் பின்னர் அவர்கள் டிசம்பர் 24 ஆம் திகதி பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது படகின் பணியாளர்கள் உட்பட 43 ஆண்கள் 02 பெண்கள் மற்றும் சிறுவன் ஒருவன் உள்ளிட்டவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டதோடு அவர்கள் 13 முதல் 53 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் மட்டக்களப்பு சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.