ஓட்டமாவடி பிரதேசத்தில் திருடப்பட்ட எழுபது லட்சம் ரூபா பெறுமதியான 44.5 பவுன் எடையுடைய நகைகள் பொலிஸாரின் முயற்சியினால் மூன்று நாட்களில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரா தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேசத்தில் கடந்த 03.01.2023 அன்று ஆசிரியர்களான தம்பதிகளின் வீட்டில் அவர்கள் பாடசாலைக்கு சென்றதன் பின்னர் காலை வேளையில் வீட்டின் கூரைவழியாக வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன் அலுமாரியில் வைத்திருந்த 44.5 பவுன் (356கிராம்) தங்க நகைகளை திருடிக் கொண்டு வீட்டிற்கு வெளியில் யாரும் வருகின்றார்களா என்று அவதானித்துக் கொண்டு நின்ற நண்பரின் உதவியுடன் சென்றுள்ளனர்.
இத் திருட்டு சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெறும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஜி.ஜி.குமாரிஸ்ரீ கருணாரத்ன தலைமையிலான பொலிஸ் கொஸ்தாபர்களான 8656 எம்.வை.தினேஸ், 68968 எம்.ஜி.என்.கங்கா, 71739 விக்ரமசேகர, 93663 பிவி.சுரேஸ் ஆகியோர் மேற்கொண்ட விசாரனைகளின் போது பொலிஸ் உத்தியோகத்தர் எம்.வை.தினேசுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் திருடப்பட்ட நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருட்டு சம்பவத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் என்ற பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் வாழைச்சேனை மற்றும் மீறாவோடை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் தொடர்பான விசாரனைகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரா தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தொடர்ந்தேர்ச்சியான திருட்டு சம்பவங்கள் இடம் பெறுவதாகவும் இதற்கு போதை பாவனையின் அதிகரிப்பே காரணம் என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.