கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் போன்று நாட்டிலுள்ள போஷாக்கு குறைந்த 40ஆயிரம் சிறுவர்கள் தொடர்பில் விசேட செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தத் திட்டத்தின் கீழ் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 21ஆயிரம் சிறுவர்களுக்கு ஒருவருக்கு 14ஆயிரம் ரூபா வீதம் செலவிடுவதற்கும் தீர்மானித்துள்ளோம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் தயாசிறி ஜயசேகர எம். பி எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தயாசிறி ஜயசேகர எம்பி தமது கேள்வியில், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவு மற்றும் திரிபோஷா வழங்கும் திட்டம் தொடர்பில் கேள்வியெழுப்பினார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்:
சிறுவர்களுக்கான போசணை திட்டம் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது தொடர்பாக விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு உதவுவதற்கு பல நிறுவனங்கள் முன் வந்துள்ளன. ஒரு நிறுவனம் ஆயிரம் சிறுவர்களை பொறுப்பேற்பதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் தாய்மாருக்கான திட்டம் போன்றதொரு திட்டமே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அந்த வகையில் 12 பில்லியன் ரூபா நிதி திரிபோஷா விநியோக வேலைத் திட்டத்திற்காக கிடைத்துள்ளது.
இந்த வேலைத் திட்டம் தற்காலிக பின்னடைவை கண்டுள்ள நிலையில் அதனை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
21,000 சிறுவர்களை உள்ளடக்கியதாக போசணைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் கொரோனா பாதிப்புக்கு பின்னர் நாட்டில் தற்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் உள்ளனர். அவர்களுக்காக விசேட வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.
அவர்களுக்கு நேரடியாக நிதி வழங்க முடியாது அவ்வாறு வழங்கப்பட்டால் அவர்களது பெற்றோர்கள் அதனை மதுவுக்காக செலவழிக்கலாம். வேறு விதமாக அந்த போசணைத் திட்டம் முன்னெடுக்கப்படும்.
ஒரு சிறுவனுக்காக ஒரு வருடத்திற்கு 14ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு வீட்டில் அவ்வாறு மூன்று சிறுவர்கள் காணப்பட்டால் அவ்வாறு வழங்குவது கடினமாக அமையலாம்.
எனவே அது தொடர்பில் மாற்று தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என்றார்.