Our Feeds


Sunday, January 29, 2023

ShortNews Admin

341 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 80 ஆயிரம் பேர் போட்டி: வர்த்தமானி இவ்வாரத்திற்குள் வெளிவரும் - நிமல் புஞ்சிஹேவா



(இராஜதுரை ஹஷான்)


ள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சகல விடயங்களும் அடங்கிய அதி விசேட வர்த்தமானி இவ்வார காலத்துக்குள் வெளியிடப்படும். இம்முறை 58 அரசியல் கட்சிகள், 133 சுயாதீன குழுக்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் 80 ஆயிரம் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வோம். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அப்பாற்பட்டு எம்மால் செயற்பட முடியாது எனவும் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தேர்தல்கள் சட்டம் மற்றும் அரசியலமைப்பினால் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு,அத்தீர்மானங்கள் வெற்றிகரமாக நிறைவுப் பெற்றுள்ளன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்தும் தீர்மானம் ஆணைக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களுக்கும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் இணக்கத்துடன் எடுக்கப்பட்டது. ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் எவ்வித கருத்து வேறுபாடுகளும் கிடையாது.

ஆணைக்குழுவின் உறுப்பினராக பதவி வகித்த சார்ல்ஸ் பதவி விலகியமை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படவில்லை. தனிப்பட்ட அல்லது பிற காரணிகளினால் அவர் பதவி விலகியிருக்கலாம். பதவி விலகல் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அவருக்கு உண்டு. ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்வது கடந்த 21ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது.

கால மதிப்பீட்டுக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டது.

தேர்தல் தொடர்பான திகதியை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் வெளியிடுவார்கள். இதற்கமைய வேட்பு மனுத்தாக்கலை அடிப்படையாக கொண்ட விடயங்கள், தேர்தல் திகதி தொடர்பான வர்த்தமானி இவ்வாரம் வெளியிடப்படும்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 58 அரசியல் கட்சிகள், 133 சுயாதீன குழுக்கள் ஊடாக 80 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என ஒரு தரப்பினரும், தேர்தலை நடத்தக்கூடாது என பிறிதொரு தரப்பினரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வோம். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அப்பாற்பட்டு எம்மால் செயல்பட முடியாது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »