Our Feeds


Wednesday, January 11, 2023

News Editor

இவ்வாண்டில் ஐ.நா.வின் செயற்பாடுகளுக்கென 3.4 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு !


 

இவ்வாண்டில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட உப கட்டமைப்புக்களின் செயற்பாடுகளுக்கென 3.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் வழமையை விடவும் இம்முறை ஐக்கிய நாடுகள் சபையின் வரவு, செலவுத்திட்டத்தின் ஊடாக மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுக்கென அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை, ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி சில தரப்பினரின் அரசியல் ரீதியான தேவைப்பாடுகளை ஈடேற்றியிருக்கின்றதே தவிர, அது போருக்குப் பின்னரான அபிவிருத்திக்கும் நல்லிணக்கத்திற்கும் எவ்வகையிலும் பங்களிப்புச்செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருக்கின்றது.

2023 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் உப கட்டமைப்புக்களின் செயற்பாடுகளுக்கென 3.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான முன்மொழிவு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிதி ஒதுக்கீட்டின் ஊடாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கட்டமைப்புசார் செயற்பாடுகளுக்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இறுதிக்கூட்டத்தொடரின்போது சர்வதேச நாடுகள் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், சர்வதேச வரிசார் ஒத்துழைப்பைப் பேணுவதற்கும் நிதி அளிக்கப்படும்.

அதுமாத்திரமன்றி மேற்குறிப்பிட்டவாறு 2023 ஆம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 3.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுக்கென வழமையை விடவும் இம்முறை அதிகளவான நிதியை ஒதுக்கீடு செய்வது குறித்து வரவு, செலவுத்திட்டம் தொடர்பான 5 ஆவது குழுவின் கூட்டத்தில் ஆராயப்பட்ட நிலையில், அது உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் பாரிய தர்க்கத்தைத் தோற்றுவித்தது.

குறிப்பாக இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுக்கென மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து தமது கடும் ஆட்சேபனையை நேரடியாக வெளிப்படுத்தினர்.

அரசியல் ரீதியில் ஊக்குவிக்கப்பட்டு, குறித்தவொரு நாடு தொடர்பில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கென ஐக்கிய நாடுகள் சபையின் வழமையான வரவு, செலவுத்திட்டத்தின் ஊடாக மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதைத் தாம் ஒருபோதும் ஆதரிக்கப்போவதில்லை என இலங்கையின் பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பில் புதிதாக நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தையும் தாம் முழுமையாக நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், 'ஏற்கனவே வெளியான தரவுகளின்படி 51/1 தீர்மானத்தைப்போன்று அதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 5.46 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்பட்டிருக்கின்ற போதிலும், அதன்மூலம் வரவேற்கத்தக்க வகையிலான நன்மைகள் எவையும் எட்டப்படவில்லை.

மாறாக குறித்த சில தரப்பினரின் அரசியல் ரீதியான தேவைப்பாடுகள் மாத்திரமே ஈடேற்றப்பட்டிருக்கின்றன' என்று குற்றஞ்சாட்டினார்.

எனவே தற்போது புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள 51/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஆதாரங்களைத் திரட்டும் வெளியகப் பொறிமுறையும்' போருக்குப் பின்னரான அபிவிருத்திக்கோ அல்லது நல்லிணக்கத்திற்கோ எவ்வகையிலும் பங்களிப்புச்செய்யாத பயனற்ற பொறிமுறையேயன்றி வேறில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், ஆகவே தாம் 51/1 தீர்மானத்தை முற்றாக நிராகரிக்கும் அதேவேளை அதனை நடைமுறைப்படுத்துவதற்காக மதிப்பிடப்பட்டுள்ள நிதியொதுக்கீட்டையும் நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »