முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முன்விளக்க கலந்துரையாடலுக்காக பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அழைக்க கொழும்பு மேல்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.
குறித்த வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களை ஆராய்ந்து அறியப்படுத்துவதற்காக திகதி ஒன்றை வழங்குமாறு பிரதிவாதி தரப்பின் சட்டத்தரணி மன்றில் கோரியமைக்கு இணங்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கடந்த 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், வர்த்தக அமைச்சராக செயற்பட்ட போது, சதொச நிறுவனத்தின் பணியாளர்களை கடமைகளில் இருந்து விலக்கி, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறி, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விராஜ் பெர்னாண்டோ, அந்த நிறுவனத்தின் பணிப்பாளரான மொஹமட் சாகீர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.