Our Feeds


Sunday, January 29, 2023

Anonymous

மலையக தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து 200 வருடம் - அட்டனில் ஊர்வலம்

 



இந்திய வம்சாவளி மக்களான மலையக தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து இவ்வருடத்துடன் 200 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதனை நினைவு கூர்ந்து அட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து மக்களின் வாழ்வியலையும் கலை, கலாசார அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் 1000 மேற்பட்டோர் கலந்து கொண்ட பாரிய ஊர்வலம் ஒன்று இன்று (29) திகதி நடைபெற்றது.


குறித்த ஊர்வலம் அட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பித்து அட்டன் நகர் ஊடாக அட்டன் டி.கே.டப்ளியு, கலாசார மண்டபத்தினை சென்றடைந்தது.


குறித்த ஊர்வலத்தில் மலையகத்தை அபிவிருத்தி செய்ய தயங்குவது ஏன்?, மலையக மக்களை சிதைக்காதே, உறுதியளித்த பல்கலைக்கழகம் எங்கே?, போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை காட்சிப்படுத்திய வண்ணம் ஊர்வலத்தில் சென்றதுடன், இவர்கள் இந்தியாவிலிருந்து வரும் போது கொண்டு வந்த கலை அம்சங்களும் இதன் போது இடம்பெற்றன.


அதனை தொடர்ந்து அட்டன் டி.கே.டப்ளியு கலாச்சார மண்டபத்தில் கலை, கலாச்சார அம்சங்கள் இடம்பெற்றதுடன் அவர்கள் தொடர்பான விசேட கருத்துரைகளும் இடம்பெற்றன.


இது குறித்த பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

இவர்களின் வாழ்வில் சொல்லக்கூடிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இந்த 200 வருடங்கள் கழிந்த நிலையில் இன்றும் கூட எங்களுக்கு என்று தனியான வீடு கிடையாது, காணி கிடையாது ஒழுங்கான பாதைகள், பாடசாலை, கல்வி, சுகாதார உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத நிலையிலேயே நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். இதனை எடுத்து கூறும் முகமாகதான் இந்த 200 வருட ஊர்வலத்தினை ஒழுங்கு செய்துள்ளோம். எதிர்காலத்திலாவுது இவற்றிக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து எங்கள் வாழ்வில் ஒளியேற்றுவார்கள் என்று நம்புகின்றோம் என தெரிவித்தனர்.


இதற்கான ஏற்பாடுகளை தேசிய கிறிஸ்துவ குழு லங்கா சபை, மெதடிஸ்ட் தேவஸ்தானம் உட்பட அருட் தந்தையர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.


குறித்த ஊர்வலத்தில் தோட்டத்தொழிலாளர்கள், மாணவர்கள், சிறுவர்கள், பொது மக்கள் என சுமார் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.


(எஸ்.கணேசன்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »