Our Feeds


Friday, January 13, 2023

SHAHNI RAMEES

200 மில்லியன் ரூபா செலவில் 75 ஆவது சுதந்திரதின ஏற்பாடுகள் : பிரதான நிகழ்வில் ஜனாதிபதியின் உரை இல்லை....

 

(எம்.மனோசித்ரா)

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் , 200 மில்லியன் ரூபா செலவில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இம்முறை சுதந்திர தின வைபவத்தில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படவுள்ளது.

மேலும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய் சங்கர் உள்ளிட்ட 400 இராஜதந்திரிகள் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் அதே வேளை , வைபவத்தின் போது ஜனாதிபதியின் விசேட உரை இடம்பெறாது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

75 ஆவது சுதந்திர தின வைபவங்களுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும்  உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த ஆகியோர் இவ்விடயங்களை தெரிவித்தனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவிக்கையில் ,

'நமோ நமோ தாயே - நூற்றாண்டை நோக்கி அடியெடுத்து வைப்போம்' என்ற தொனிப் பொருளின் கீழ் 75 ஆவது சுதந்திர தின வைபவம் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய மத வழிபாடுகளுக்கு முன்னுரிமையளித்து பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் அவை ஆரம்பமாகும்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு சித்திர போட்டி, கலாசார மாநாடுகள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு செயற்திட்டங்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தவுள்ளன.

சுதந்திர தினத்திற்கான பிரதான நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் காலி முகத்திடலில் காலை 8.30 க்கு ஆரம்பமாகும். முப்படையினர் , பொலிஸார் மற்றும் தேசிய பயிற்சிப்படையணி மாத்திரம் பங்கேற்கும் மரியாதை அணி வகுப்பு இடம்பெறும்.

முப்படையினர் , பொலிஸ் மற்றும் தேசிய பயிற்சிப்படையணியைச் சேர்ந்த 6,012 படையினரும் , 320 வாகனங்களும் இந்த பேரணியில் பங்குபற்றவுள்ளன. மேஜர் ஜெனரல் தீபால் புஸ்வெல்லவின் தலைமையில் இந்த பேரணி இடம்பெறவுள்ளது.

இந்த வைபம் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய சம்பிரதாய பூர்வமாக இடம்பெறும் ஜனாதிபதியின் உரை வைபத்தின் போது இடம்பெறாது. மாறாக அன்றைய தினம் மாலை வேளையில் ஜனாதிபதியின் விசேட உரை இடம்பெறும்.

எதிர்வரும் 25 ஆண்டுகளை இலக்காகக் கொண்ட வேலைத்திட்டங்களின் அடிப்படையில் சுதந்திர தின வைபவ கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. அனைத்து இன மற்றும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை ஒன்றிணைப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

அதற்கமைய சுதந்திர தின வைபவங்கள் ஆரம்பமாகும் போது தேசிய கீதம் சிங்கள மொழியிலும் , நிறைவடையும் போது தமிழ் மொழியிலும் பாடப்படும் என்றார்.

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவிக்கையில் ,

கண்டி - தலதா மாளிகையில் பெப்ரவரி 2 ஆம் திகதி மாலை 3 மணிக்கு விசேட பூஜைகள் இடம்பெறவுள்ளன. கொள்ளுபிட்டி பொல்வத்தை விகாரையில் சுதந்திர தினத்தன்று காலை 7.30 க்கு பௌத்த மத வழிபாடுகள் இடம்பெறும்.

சுதந்திர தின வைபவங்கள் ஒரே நாளில் மட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக மாவட்ட மட்டத்திலும் , பிரதேச செயலக மட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதே போன்று பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி சகல மத வழிபாட்டு தலங்களில் 75 விளக்குகளை அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஏற்பாடுகளுக்கு அப்பால் 1996 குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு 2 மில்லியன் குடும்பங்களை இலக்காகக் கொண்டு 10 கிலோ கிராம் என்ற அடிப்படையில் இரு சந்தர்ப்பங்களில் அரிசி வழங்கப்படவுள்ளது. கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலி முகத்திடல் வீதிகளின் இரு மருங்கிலும் பொது மக்கள் சுதந்திர தின கொண்டாட்டங்களை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 1,000 ரூபா நாணயக் குற்றிகள் 75 வெளியிடப்படவுள்ளன.

அத்தோடு டீ.எஸ்.சேனாநாயக்க , ஜவஹர்லால் நேரு மற்றும் மொஹம்மட் அலி ஜூம்மா ஆகியோரது நிழற்படங்கள் பதிக்கப்பட்ட முத்திரைகளும் வெளியிடப்படவுள்ளன.

மேலும் பொது நலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அரச தலைவர்கள் உள்ளிட்ட 400 இராஜதந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே வேளை தேசிய மட்டத்தில் அரச தலைவர்கள் , நாட்டு நலனுடன் தொடர்புடைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதானிகள் உள்ளிட்ட 3,250 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைபவங்களுக்கு 757 மில்லியன் ரூபாய் செலவாகும் என்று ஆரம்பத்தில் மதிப்பிப்பட்ட போதிலும் , உள்ளுராட்டலுவல்கள் அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கிடையிலான சுமார் 20 கலந்துரையாடல்களின் பின்னர் அந்த செலவுகள் 200 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிதி விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சிக்களினாலும் , சுய விருப்பத்தின் பேரில் தனியார் நிறுவனங்களினாலும் வழங்கப்பட்டுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »