சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை 02 மாத காலத்திற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதற்காக 40,000 மெற்றிக் தொன் அரிசி தேவைப்படுவதோடு, அதற்கு அரசாங்கம் 61,600 மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டும்.
சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களின் ஆதரவுடன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் கீழ் தற்பொழுது காணப்படும் முறையை பயன்படுத்தி அடையாளங்காணப்பட்ட சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி பகிர்ந்தளிக்கப்பட உள்ளதோடு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக இது தொடர்பில் மாவட்ட செயலாளர்களின் ஒருங்கிணைப்புடன் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.
நெல் கொள்வனவுக்கு 6,200 மில்லியன் ரூபா, நெல் உலர்த்துவதற்கு 290 மில்லியன் ரூபா, கதிரடிக்கு வாடகைக்கு 590 மில்லியன் ரூபா, பொதிச் செலவுக்கு 200 மில்லியன் ரூபா, நெல் ஆலை உரிமையாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக 160 மில்லியன் ரூபா, அரிசி போக்குவரத்துச் செலவுக்கு 600 மில்லியன் ரூபா என்ற வகையில் 8,040. மில்லியன் ரூபா இதற்காக மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், சந்தை விலைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து இத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட செலவு மாறுபடும். தேவை ஏற்பட்டால், சுமார் ரூ.10,000 வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு இதற்குப் பயன்படுத்தப்படும்.
கமத்தொழில் திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2022/2023 பெரும்போகத்தில் நெல் பயிரிடப்பட்ட பரப்பளவு சுமார் 732,201 ஹெக்டெயராக இருந்ததோடு, மற்றும் எதிர்பார்க்கப்படும் நெல் விளைச்சல் 3.3 மில்லியன் மெற்றிக் தொன்களாகும். இதன் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய அரிசியின் அளவு சுமார் 2.2 மில்லியன் மெற்றிக் தொன்களாகும். நாட்டின் மாதாந்த அரிசித் தேவையான சுமார் 210,000 மெற்றிக் தொன்களைக் கருத்திற்கொண்டால், எதிர்வரும் பெரும்போகத்தில் அரிசி மேலதிக கையிருப்பு கிடைக்கலாம் என அவதானிக்கப்படுகின்றது.
அதன்படி, நெல் விவசாயி மற்றும் நுகர்வோர் இருவரையும் பாதுகாக்கும் வகையில், 2020/23 பெரும்போகத்தில் குறிப்பிட்ட அளவு நெல் கொள்முதல் செய்வதில் அரசாங்கம் தலையிடுவது அவசியம் ஆகும்.
மேலும், நாட்டில் நிலவும் கடினமான பொருளாதார நிலைமை காரணமாக, சமூகத்தின் குறைந்த வருமானம் பெறும் குழுக்களின் போசாக்கு மட்டத்தைப் பேணுவதற்கு ஆதரவளித்து இந்த நெருக்கடியின் பாதகமான விளைவுகளிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும். சமுர்த்தி பயனாளர்கள் உட்பட சுமார் 2 மில்லியன் குடும்பங்களாக இருக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2023 வரை இவர்களுக்காக அரசாங்கம் மேலதிக நிதியை வழங்கியிருந்தாலும், இந்த குறைந்த வருமானம் பெறுபவர்களை சில காலம் கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. 2022/2023 பெரும் போகத்தில் நெல் அறுவடை முந்தைய பருவத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அடையாளம் காணப்பட்ட குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை பராமரிப்பதற்கு மேலதிக ஒத்துழைப்பை வழங்குவதற்காக குறிப்பிட்ட அளவு நெல்லைப் பயன்படுத்துவது பொருத்தமானது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுவோர் பயனடைவார்கள்.
திறைசேரி செயலாளர், ஜனாதிபதி செயலக அதிகாரிகள், விவசாய அமைச்சின் செயலாளர், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களின் செயலாளர், பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் மற்றும் சகல மாவட்டச் செயலாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்கள் என்பன உத்தேச திட்டத்தை செயல்படுத்தும் முறை குறித்து ஆராயப்படும். உத்தேச அரிசி விநியோகப் பொறிமுறை தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, விவசாயிகள் வாங்கும் நெல் வகைகளின் உற்பத்திச் செலவு, அரிசி கொள்வனவு செய்யும் உத்தரவாத விலை, நெல் ஆலை உரிமையாளர்களின் பங்களிப்பு, போக்குவரத்து முறை, கதிரடி வாடகை ஆகியவை குறித்து விரிவாக ஆராயப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.