கொழும்பிலிருந்து பதுளை வரை புதிய சொகுசு புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு புகையிரத சேவை பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படவுள்ளது.
இந்த ரயில் சேவை பிரதி செவ்வாய் கிழமைகளில் கொழும்பிலிருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு எல்ல ஊடாக மாலை 4.00 மணிக்கு பதுளையை அடைந்து மறுநாள் காலை 6.00 மணிக்கு புறப்பட்டு மாலை 6.00 மணிக்கு கொழும்பை அடையும்.
இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் விலை $99.99 ஆகும். பணத்திற்கேற்ற சிறந்த அனுபவமும் சேவையும் கிடைக்கும் என்றும் நட்சத்திர வகுப்பில் காலை உணவு, மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. .
பயணத்தின் போது ரம்புக்கனை, பேராதனை சந்தி, நாவலப்பிட்டி, ஹட்டன், சென்ட் கிளேர் நீர்வீழ்ச்சி, நானுஓயா எல்ஜின் நீர்வீழ்ச்சி, பட்டிப்பொல புகையிரத நிலையம் ஆகிய பிரதேசங்களில் புகையிரதம் நிறுத்தப்படும்.
மேலும், இந்த அழகிய பயணத்தின் போது கண்டி புகையிரத நிலையத்தில் கலை கலாசார நிகழ்ச்சியை காணும் வாய்ப்பும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .