வடக்கு பிரான்ஸில் தங்கியிருந்த 14 இலங்கையர்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஐரோப்பா உட்பட பல நாடுகளில் மனிதக் கடத்தல் செயற்பாடுகளை மேற்கொண்டமை காரணமாக அவர்கள் சிறை வைக்கப்பட்டனர்.
இந்த செயற்பாடுகள் தற்போது ஐரோப்பிய கண்டம் முழுவதும் ஒரு இலாபகரமான வர்த்தகமாக மாறியுள்ள குற்றவியல் வலையமைப்புகளை ஒடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாகும்.
இந்த மோசடியை மேற்பார்வை செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரான்ஸின் செரிஃபோன்டைன் கிராமத்தில் மளிகைக் கடையொன்றை நடத்தி வந்த முக்கிய சந்தேக நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறையும், ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளின் குடியேற்றவாசிகளை உக்ரேனில் இருந்து ஐரோப்பாவிற்கு கொண்டு செல்வதற்கான கட்டணங்களையும், வழிகளையும் நிர்ணயிப்பதற்காக கிழக்கு ஐரோப்பாவில் உள்ள எல்லை அதிகாரிகளுக்கு குறித்த நபர் லஞ்சம் வழங்கியதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மற்றைய இலங்கையர் ஒருவர் பிரித்தானியாவில் நாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராக போராடியவர் என்பதுடன், அவருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மற்றவர்களுக்கு குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சமீபத்திய ஆண்டுகளில் ஐரோப்பாவை நோக்கி செல்லும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது. மேலும் அதனுடன் தொடர்புடைய கடத்தல் கும்பல்களும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளன.
இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளில் பலர் பிரிட்டனை அடைய ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயற்சி செய்கிறார்கள்.
மேலும் இங்கிலாந்து அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, 45,000 க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் 2022 ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து பிரிட்டனுக்கு ஆபத்தான எல்லையைக் கடந்துள்ளனர்.