ஆர்.ராம்
அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதோடு, எதிர்காலத்தில் காணி அபகரிப்புக்களை நிறுத்துவதற்குமுரிய பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், தமிழ்த் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றகரமாக இடம்பெறுவதாகவும் பிரச்சினைகளுக்கு தீர்வினை அளிக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இனப்பிரச்சினை தீர்வு மற்றும் தமிழ்த் தரப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீடித்துக்கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காண வேண்டும் என்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகுந்த கரிசனையுடன் இருக்கின்றார்.
அந்த வகையில், தற்போது 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.
குறித்த சட்டத்தினை அமுலாக்குவதில் உள்ள நடைமுறைப்பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக கவனத்தில் கொள்ளப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் கையகப்படுத்துவதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்க்ள அதிகமாக உள்ளன.
இந்நிலையில், குறித்த வியடம் சம்பந்தமாக அரசாங்கம் கவனத்தில் கொண்டு, எதிர்காலத்தில் காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகளை முற்றாக கைவிட வேண்டும் என்று பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், தமிழ்த் தரப்புக்களுடன் தொடர்ச்சியாக பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றோம். இந்தப் பேச்சுக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.
அப்பேச்சுவார்த்தைகள் முன்னேற்றகரமாக உள்ளது. அவை வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார்.