ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு சதி தீட்டியமை மற்றும் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நவ்பர் மௌலவி உள்ளிட்ட 25 பேரின் பிணை கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (ஜன.05) நிராகரித்து தீர்ப்பளித்தது.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான தமித் தொட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமே இந்த உத்தரவை பிறப்பித்தது.
சந்தேகநபர்களுக்கு தற்போது பிணையில் வழங்குகின்றமை பொருத்தமானதல்ல என இந்த உத்தரவை அறிவித்த தலைமை நீதிபதி தமித் தொட்டவத்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, பிணை கோரிக்கைகளை நிராகரிப்பதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.
இந்த வழக்கு மீதான விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை ஒத்தி வைக்க நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
குறித்த 25 சந்தேகநபர்கள் மீதும் 13,270 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.