நாட்டின் நலனுக்கான தீர்வு விடயத்தில் சர்வ அதிகாரங்களையும் செயற்படுத்துங்கள்; ஜனாதிபதியிடம் முஷாரப் எம்பி வேண்டுகோள்.
ஜனாதிபதியுடனான சர்வகட்சி மாநாட்டில் பல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் 13ஐ அமுல்படுத்தல் மற்றும் காணிவிடுவிப்பு ஆகிய இரு விடயங்கள் முக்கிய பேசுபொருள்களாக இருந்தன.
13ஆம் திருத்தம் என்பது பலரும் பல தடவைகள் அமுல்படுத்துவதாக ஏகமனதாக ஒப்புக்கொண்ட விடயம். இதனை முழுமையாகவும் விரைவாகவும் அமுல்படுத்தும் ரீதியில் ஜனாதிபதி அவர்கள் பேசினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் அத்துரலியே ரத்ண தேரர் ஆகியோர் பேசும்போது 13க்கும் சமஷ்டிக்கும் முற்றுமுழுதான எதிர் மனநிலையில் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
வரிபாலனத்துக்கும் வனவிலங்குகளுக்கும் காடுகளை வர்த்தமானி அறிவித்திருக்கையில் காணிகளை தேவையற்றவர்களுக்கும், டயஸ்போராக்களுக்கும் வழங்க முடியாது என அத்துரலிய ரத்ண தேரர் அவர்கள் கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அவர்கள் அத்துரலிய ரத்ண தேரர் மற்றம் சரத் வீரசேகர ஆகியோரின் கருத்துக்களை காரசாரமாக எதிர்த்தார். இரசாயன உரத்தை நிறுத்துவதாக நீங்கள் எடுத்த முடிவுதான் இந்த நாட்டை அயல் நாடுகளிடம் அரிசிக்காக கையேந்தும் நிலையை ஏற்படுத்தி இருப்பதாக எடுத்துக் காட்டினார். நாட்டுமக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்தும் விதமாக பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
அஇமகா தலைவர் ரிசாத் பதியுதீன் அவர்கள் எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் ரஊப் ஹக்கீம் அவர்கள் பேசும் போது காணிவிடுவிப்பு விடயத்தில் மக்களை உள்வாங்கி காணிப் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை கேட்டறிந்து தீர்வுகளை கண்டறியுமாறு கேட்டுக் கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்கள் பேசும்போது,
இனப்பிரச்சினை தீர்வு, காணிப்பிரச்சினைகளுக்கான தீர்வு போன்ற இன்னோரன்ன விடயங்களுக்கு ஆணைக்குழுக்களை அமைப்பதும், பேசிப்பேசி காலங்கடத்துவதாக இப்பிரச்சினைகள் தேக்கமடைந்திருக்கின்றன. ஜனாதிபதி அவர்களின் தலைமையில் சர்வ கட்சிகள் இனப்பிரச்சினை தொடர்பாக பேசுவது இது இரண்டாவது தடவை. முன்னர் பேசியபோது நான் கேட்டுக்கொண்ட விடயங்களை இங்கு நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
சமஷ்ட்டி, ஒற்றையாட்சி என்ற இந்த இரண்டு சொல்லாடல்களும் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவின்மை இருக்கிறது. முதலில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கருந்தரங்கை நடாத்தி இந்த விடயங்கள் தொடர்பாக ஒரு தெளிவை வழங்குங்கள்.
13ம் திருத்தம் என்பது என்ன? அதன்கீழ் வழங்கப்படுகின்ற பொலிஸ் அதிகாரம் என்ன? காணி அதிகாரம் என்ன? அவ்வாறு அதிகாரங்கள் பகிரப்படும் போது நாடு பிளவுறும் என்பதில் உண்மை இருக்கிறதா? சமஷ்டி ஆட்சியை ஒழுகும் நாடுகள் பிளவுபட்டிருக்கின்றனவா? அந்த நாட்டு மக்கள் தேசப்பற்றுடன் இருக்கிறார்களா? அல்லது பிளவுபட்டிருக்கிறார்களா? என்பவை பற்றி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்யுங்கள். அப்போதுதான் இந்த நாட்டில் இனப்பிரச்சினையை தீர்வு நோக்கி கொண்டு செல்ல முடியும் என்றார்.
மேலும் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் பேசும்போது,
ஆணைக்குழுக்களை அமைப்பதும், காணிப்பிரச்சினை, இனப்பிரச்சினைபற்றி பேசுவதும், ஆட்சி மாறியபின் இன்னொரு ஆணைக்குழு அமைப்பதுமாக காலம் கடத்தும் செயற்பாடுதான் நடந்தேருகிறது. 13 தொடர்பாக 37 வருடங்களாக பேசிக்கொண்டிருக்கிறோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவது தொடர்பாக இன்றும் பேசுகிறோம். இந்த விடயங்கள் இப்படியே தொடர்ந்தும் நீடிக்காமல் திறந்த மனதுடன் விரைவாக தீர்வுகளை நடைமுறைப்படுத்துங்கள்.
காணிப்பிரச்சினைகள் தொடர்பாக நான் அவதானித்த விடயங்கள் யாதெனில், காணிப்பிரச்சினைகளை சீபி ரட்நாயக்க அவர்கள் அமைச்சராக இருந்தபோது ஒரு தடவை சமர்ப்பித்து அவை தீர்வை எட்ட இருந்த தருணத்தில் அமைச்சர் மாற்றப்பட்டு மகிந்த அமரவீர அவர்கள் அமைச்சரானார். பின்னர் அவரின் அமைச்சில் பிரச்சினைகளை சமர்ப்பித்து பல பேச்சுக்களை நடாத்தி அவை தீர்வுகளை எட்ட இருந்த தருணத்தில் அவர் மாற்றப்பட்டு இப்போது பவித்ரா வன்னியாராச்சி அவர்களை நியமித்திருக்கிறீர்கள். இப்போது மீண்டும் மூன்றாவது தடவையாக முதலில் இருந்து பேச்சுக்களை ஆரம்பிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
ஒரு ஆணைக்குழுவை அமைத்தால், அதன் பணிக்கான கால எல்லையை நிரணயித்து அந்த நாட்களுக்குள் ஆணைக்குழுக்களின் பணிகளை முடிவுறுத்தி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் வழிவகுக்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம் அவர்கள் பேசும் போது, காணிப்பிரச்சினைகள் தொடர்ப்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மக்களையும் உள்வாங்கி அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்குமாறு சொன்னார்கள்.
காணிப்பிரச்சினைகள் தொடர்பான தரவுகளும் மக்களின் கோரிக்கைகளும் ஏற்கனவே பல தடவைகள் பல அலுவலகங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது; தரவுகளை மீண்டும் மீண்டும் வழங்கி வழங்கி மக்கள் சோர்வடைந்திருக்கிறார்கள். மட்டுமன்றி அவர்களை இவ்வாறு அலைக்கழிக்கும் பிராந்திய அரசியல்வாதிகள் தொடர்பாக அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்கள்.
அம்பாறை மாவட்டத்தின் காணிப்பிரச்சினைகள் தொடர்பாக தீர்வு தருவதாக கூறி மக்களை மீண்டும் அலைக்கழிக்க வேண்டாம். அம்பாறை மாவட்டத்தின் 38 காணிப்பிரச்சினைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் நான் தருகிறேன். இந்த தகவல்கள் ஏற்கனவே பிரதேச செயலங்களுக்கு வழங்கி இருக்கிறேன். நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறேன். அரசாங்க அதிபர் நியமித்த ஆணைக்குழுவிடம் வழங்கி இருக்கிறேன். தரவுகள் தேவையான அனைத்து அலுவலகங்களிலும் மக்கள் வழங்கிய தரவுகள் தாராளமாக இருக்கின்றன. காணிகளை விடுவிக்கும் பணி மட்டுமே நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது.
ஆகவே ஜனாதிபதி அவர்கள் தனது சர்வ அதிகாரங்களையும் பயன்படுத்தி காணிகளை விடுவித்து மக்களுக்கு வழங்குங்கள் என்றார். அதே போன்று இனப்பிரச்சினைக்கும், 13க்கும் உடனடியாக தீர்வுகளை நடைமுறைப்படுத்தி நாட்டு மக்கள் அமைதியான சூழலில் நாடு மீதான பற்றுடன் வாழ ஜனாதிபதி அவர்கள் தனது சர்வ அதிகாரங்களையும் பயன்படுத்தி தீர்வுகளை நடைமுறைப்படுத்துங்கள். நாட்டின் நலனுக்காக நல்லெண்ணத்துடன் ஜனாதிபதியாகிய நீங்கள் உங்கள் அதிகாரங்களை பயன்படுத்துவதில் தவறில்லை என்றார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கள் அவர்கள், அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் இழுபறி செய்யாமல் அனைவரும் ஒத்துழைத்தால் இப்பிரச்சினைகளுக்கு என்னால் தீர்வுகளை நடைமுறைப்படுத்த முடியும் என்றார்.