உறைபனி காரணமாக ஆப்கானிஸ்தானில் கடந்த பதினைந்து நாட்களில் குறைந்த பட்சம் 124 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சுமார் 70,000 கால்நடைகளும் இறந்துவிட்டதாக இடர் முகாத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் பெண்கள் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரிவதை தலிபான்கள் தடை செய்ததை அடுத்து, பல உதவி நிறுவனங்கள் தமது செயல்பாடுகளை அங்கு நிறுத்தியுள்ளன.
இறப்புகள் தொடர்ந்தாலும் தமது விதிமுறைகள் மாற்றப்படாது என்று, ஆப்கான் அமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
“ஆப்கானிஸ்தானின் பல பகுதிகள் இப்போது பனியால் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்புக்கு அனுப்பப்பட்டன. ஆனால் அவர்களால் மலைப்பகுதிகளில் தரையிறங்க முடியவில்லை” என, இடர் முகாமைத்துவ அமைச்சர் முல்லா முகமது அப்பாஸ் கூறியுள்ளார் .
“குளிரால் உயிர் இழந்தவர்களில் பெரும்பாலானோர் மேய்ப்பர்கள் அல்லது கிராமப்புறங்களில் வசிப்பவர்கள். அவர்களுக்கு சுகாதார வசதி இல்லை” என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
“மலைப் பகுதிகளில் வசிப்பவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். பனிப்பொழிவு காரணமாக மலைகள் வழியாக செல்லும் பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டுள்ளன. அங்கு கார்கள் சிக்கி, உறைபனியில் பயணிகள் இறந்துள்ளனர்” எனவும் அவர் தெரிவித்தார்.