உள்ளுராட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 சபைகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட 108 வேட்பு மனுக்களில் 17 நிராகரிக்கப்பட்டுள்ளன என்று நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான நந்தன கலபட தெரிவித்தார்.
இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் 85 வேட்புமனுக்கள், சுயேட்சைக்குழுக்களின் 6 வேட்பு மனுக்கள் உள்ளடங்கலாக 91 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
நுவரெலியா மாநகர சபைக்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 10 வேட்பு மனுக்களில் சுயேட்சைக்குழுவொன்றின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொட்டகலை பிரதேச சபைக்காக முன்வைக்கப்பட்ட 11 வேட்பு மனுக்களில் சுயாதீன அணியொன்றினதும் (செந்தூரன்), அபிநவ நிதாஸ் பெரமுனவினதும், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, சுதந்திர மக்கள் கூட்டணி, தேசிய ஜனநாயக முன்னணி உள்ளடங்களாக 5 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
நோர்வூட் பிரதேச சபைக்காக தாக்கல் செய்யப்பட்ட 10 வேட்பு மனுக்களில் மூன்றும், நுவரெலியா பிரதேச சபைக்கு முன்வைக்கப்பட்ட 10 வேட்பு மனுக்களில் இரண்டும், ஹங்குராங்கெத்த பிரதேச சபைக்கு முன்வைக்கப்பட்ட 8 வேட்பு மனுக்களில் ஒரு வேட்பு மனுவும் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.
அக்கரபத்தனை பிரதேச சபைக்காக சமர்ப்பிக்கப்பட்ட 9 வேட்பு மனுக்களில் லங்கா சமசமாஜக் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வலப்பனை பிரதேச சபைக்காக முன்வைக்கப்பட்ட 9 வேட்பு மனுக்களில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அம்பகமுவ பிரதேச சபைக்காக தாக்கல் செய்யப்பட்ட 9 வேட்பு மனுக்களில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், கொத்மலை பிரதேச சபைக்காக தாக்கல் செய்யப்பட்ட 6 வேட்பு மனுக்களில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிரதேச சபைக்காக முன்வைக்கப்பட்ட 12 வேட்பு மனுக்களில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
`ஹட்டன் - டிக்கோயா நகர சபைக்காக முன்வைக்கப்பட்ட 7 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல தலவாக்கலை, லிந்துலை நகர சபைக்காக முன்வைக்கப்பட்ட 07 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
(எஸ்.கணேசன்)