புகையிரத தடம்புரள்வுகளை குறைக்கவும், புகையிரத சேவைகளை மேம்படுத்தவும், 45 அடி நீளமுள்ள 10,000 புகையிரத தண்டவாளங்களை சீனாவில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக புகையிரத தடம்புரண்ட சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இரண்டு மாதங்களில் இறக்குமதிகள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் புனரமைப்பு இடம்பெறும் போது புகையிரத மார்க்கங்கள் மூடப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.
அதுவரையில் இருக்கும் வளங்களைக் கொண்டு புகையிரத சேவைகளை நிர்வகிக்க வேண்டும். சில மாற்றீடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுவருகின்றன. பாணந்துறை-வாத்துவ புகையிரத மார்க்கத்தின் பல இடங்களில் தண்டவாளங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றார்.
புகையிரத தண்டவாளங்களை இறக்குமதிசெய்ய ஒரு பில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.