(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
மஹர சிறைச்சாலையில் முஸ்லிம்களுக்கு தொழுகை நடத்த பொருத்தமான இடம் ஒன்றை பார்க்குமாறு முஸ்லிம் சமய விவகாரம் தொடர்பான பணிப்பாளருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (05) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கையில்,
மஹர சிறைச்சாலையில் மத வழிபாட்டு நிலையம் ஒன்று இருக்கின்றது. அந்த பிரதேச மக்கள் பல நூறு வருடங்களாக அந்த வழிபாட்டு நிலையத்தில் வழிபட்டு வந்துள்ளனர். அதேநேரம் அங்கு இடம்பெற்ற அறநெறிப்பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வந்துள்ளனர்.
என்றாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தாெடர்ந்து, பாதுகாப்பு காரணமாக அந்த வழிபாட்டு நிலையம் பயன்படுத்த தடைவித்து, மூடிவிடப்பட்டது.
என்றாலும் தற்போது சிறைச்சாலை அதிகாரிகள் தங்களின் வேறு தேவைகளுக்காக குறித்த மத வழிபாட்டு நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே அந்த பிரதேச மக்களுக்கு வேறு மத வழிபாட்டு நிலையம் ஒன்று அந்த பகுதியில் இல்லை. அதனால் சிறைச்சாலை வளாகத்தில் இருக்கும் மதவழிபாட்டு நிலையத்தை மீண்டும் அந்த மக்களுக்கு வழுங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
அதற்கு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தொடர்ந்து பதிலளிக்கையில்,
மஹர சிறைச்சாலையில் அமைந்துள்ள மதவழிபாட்டு நிலையம் தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தி இருக்கின்றனர்.
அதன் பிரகாரம் அந்த இடத்தில் பொருத்தமான இடம் ஒன்றை பார்க்குமாறு முஸ்லிம் சமய விவகாரம் தொடர்பான பணிப்பாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி உத்திரவிட்டிருக்கின்றார்.
அந்த இடத்தில் மத வழிபாட்டு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார் என்றார்.