(எம்.எப்.எம்.பஸீர்)
மஹரகம - கபூரியா அரபுக் கல்லூரியின் சொத்துக்களுக்கும் கல்வி நடவடிக்கைகளுக்கும் அக்கல்லூரியின் நிர்வாக சபையினால் சவால்கள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (2) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
கொழும்பு 14 - கிரேண்பாஸ் வீதியில் அமைந்திருந்த, கபூரியா அரபுக் கல்லூரிக்கான வக்பு சொத்தாக கருதப்படும் முன்னர் சுலைமான் வைத்தியசாலை அமைந்திருந்த பகுதிக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கபூரிய அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடுச் செய்திருந்தது.
இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையின் பின்னர், இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கபூரியாவையும் அதன் வளங்களையும் காப்பாற்றுவோம் எனும் தொனிப் பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தனியார் சொத்து எனும் பெயரின் கபூரியா சொத்துக்களை நாசமாக்காதே, வக்பு சொத்தை அபகரிக்க விடமாட்டோம், கபூரியா பொதுச் சொத்தை அபகரிக்க இனவாதத்தை தூண்டாதே உள்ளிட்ட பல்வேறு பதாதைகளுடன் நூற்றுக்கணக்கானவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியும் இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்று, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். கபூரியா வக்பு சொத்து தொடர்பில் சுமார் 9 வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள நிலையில், குறித்த பிரச்சினையை சமூக மயப்படுத்துவதற்காகவும் வக்பு சொத்துக்கள் தொடர்பில் பொது மக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காகவும் இவ்வார்ப்பாட்டப் பேரணி நடாத்தப்படுவதாக இதன்போது அசாத் சாலி குறிப்பிட்டார்.
கபூரியா அரபுக் கல்லூரி, மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லம் போன்றவற்ரின் வக்பு சொத்துக்கள், பொது நம்பிக்கை உடமையாக இருக்கும் நிலையில், அவற்றை தனி நபர் நம்பிக்கை உடமையாக காட்டி சூறையாட முயற்சிகள் இடம்பெறுவதாகவும், இதற்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் அவர் கோரினார்.
பொது நம்பிக்கை உடமைகளை கொள்ளையடிப்பதை தடுக்க ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் தலையீடு செய்ய வேண்டும் எனவும் சட்ட மா அதிபரும் இது விடயத்தில் தமது நிலைப்பாடுகளை நீதிமன்றுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.
இதனைவிட, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கபூரியா அரபுக் கல்லூரி பழைய மாணவர் சங்க செயலர் ஐ.எல்.டி. டிஷாட் மொஹம்மட், மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்ல பழைய மாணவர் சங்க தலைவர் அஸ்ஹர் உள்ளிட்டோரும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.