எமது நாட்டில் டிஜிட்டல் மைய பேதம் நிலவுவதாகவும், சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகள் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கல்வி போன்ற நவீன கல்வி முறைகளைப் பயன்படுத்தினாலும்,அரச பாடசாலைகளில் அவ்வாறான முறைமைகள் இடம் பெறுவதில்லை எனவும், இதனால் கல்வியில் பேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு ஒரே தீர்வு, ஒவ்வொரு பாடசாலையிலும் விஞ்ஞானம், தொழில் நுட்பம், பொறியியல், ஆங்கில மொழி, கணிதம், மருத்துவம், முகாமைத்துவம் போன்ற பாடங்களில் ஆங்கில மொழியை மையமாகக் கொண்ட புரட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஆனால் எமது நாட்டில் தேசப்பற்று குறித்து வாயாடல் மாத்திரமே நடப்பதால் எம்மைப் பின்தங்கிய நாடுகள் கூட கல்வித்துறையில் அளப்பரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
தனிப்பட்ட நலன்களுக்காக இளைஞர்களை தவறான பாதைக்கு போகும் தலைமுறையை உருவாக்க வேண்டிய அவசியமில்லை எனவும், இவ்வாறானதொரு தலைமுறை உருவாகுவதை தடுத்து இலங்கையை உலகில் முதலாவதாக மாற்றுவதே பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களின் முதன்மையான நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு, திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 43வது கட்டமாக நாற்பத்து ஆறு இலட்சம் (4,600,000.00) பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்றை இன்று (16) சிலாபம் சாந்த மரியா கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் பிரகாரம், இதுவரை ரூ. 204,200,000 பெறுமதியான பேருந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நாட்டில் கல்வித் தரம் எவ்வளவு தான் உயர்ந்ததாக இருந்தாலும், பல்கலைக் கழகக் கல்வியை முடிப்பவர்களில் பெரும்பான்மையானோர் வேலையின்மையால் அவதிப்படுவதால் இம்முறைமை மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான கொள்கை, தொலைநோக்கு மற்றும் போக்கு, உலகில் முதல் நிலைக்கு இலங்கையை ஸ்தானப்படுத்துவதே எனவும், இக்கொள்கையின் ஊடாக இந்நாட்டு குடிமக்களை சர்வதேச அளவில் கல்வி பெறும் உரிமையை மனித உரிமையாக மாற்றுவதாகவும், உயர் தரத்திலான கல்விக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதாகவும், திருப்திகரமான ஆசிரியர் சேவை மற்றும் கல்வித்துறையில் ஏனைய சேவைகளை உருவாக்கி நாட்டின் இளைய தலைமுறையினரின் கல்வியை பலப்படுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போது நமது நாட்டின் கல்வித்துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், வகுப்பறைக் கல்வியிலும், பல்கலைக் கழகக் கல்வியிலும் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும், புதிய சவால்கள் மற்றும் போக்குகளை எதிர்கொள்ள அறிவால் ஆயுதம் ஏந்திய குடிமக்களை உருவாக்க வேண்டும் எனவும், 21 ஆம் நூற்றாண்டின் 3 ஆவது தசாப்தத்தில், உலகம் மிக வேகமாக அபிவிருத்தியடைந்து வருவதால், நவீன தொழில்நுட்ப கட்டமைப்பால் நாம் ஒரு நாடாக முன்னேர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அவ்வாறே, சலுகைகள் பதவிகளை எதிர்பார்த்து திருடர்களுடன் டீல் போட ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை எனவும், அத்தகைய பதவிகளை விட கொள்கைகளை முதன்மையாகக் கொண்டு செயற்படுவதாகவும், மக்களும் கூட இவ்விடயத்தில் பலத்த நம்பிக்கை கொண்டுள்ளதால் தமது பிரச்சினைகளை தீர்க்குமாறு முதன் முறையாக எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்கின்றனர் எனவும், அத்தகைய கோரிக்கைகளுக்கு எவ்வகையிலேனும் தீர்வு காண்பதற்கு எதிர்க்கட்சியாக தானும் தனது குழுவும் செயற்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.