தேசிய உற்பத்தி திறன் விருதுகள் போட்டியில் அக்குறணை பிரதேச சபை அகில இலங்கை ரீதியில் மூன்றாவது இடம் பெற்றமைக்கான விருது, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கௌரவ அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களினால் நேற்றைய தினம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு பிரதமர் காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்த வெற்றி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அக்குரணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாதுத்தீன் அவர்கள், “இந்த சந்தர்ப்பத்தில் எங்களுக்கு தொடர்ந்தும் பல்வேறுபட்ட வழிகாட்டல்களை வழங்கி வரும் பிரதேசத்தின் சர்வமத தலைவர்கள், இந்த அடைவினை வெற்றிகரமாக சாத்தியப்படுத்தி அடைந்து கொள்ள பக்க பலமாக நின்ற பிரதேச சபையின் அனைத்து கௌரவ உறுப்பினர்கள், அக்குறணை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், மற்றும் எமக்கு பல்வேறு வகையிலும் ஒத்துழைப்புக்களை வழங்கும் ஏனைய துறைகளில் உள்ள அதிகாரிகள், தொடர்ந்தும் எமக்கு ஒத்துழைத்து வரும் அரச சார்பற்றவர்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள் அனைவருக்கும் தவிசாளர் என்கிற வகையில் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.