அதிக ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் தங்களிடையில் இருந்த உறவின் தன்மை பலமிழந்திருப்பதைத் தாங்களே உணர்ந்திருப்பதாக 66% தம்பதிகள் கூறியுள்ளனர்.
இன்றைய டிஜிட்டல் உலகில் `ஸ்மார்ட்போன்’ இல்லாமல் ஓர் அணுவும் அசைவதில்லை. நமக்கு பல வகைகளில் அவை உதவியாக உள்ளன. அதே நேரம், அதீத ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் உறவுகளில் சிக்கல் ஏற்படுவதாக, குறிப்பாக இந்தியாவில் தம்பதிகளில் 88% பேரின் உறவுச்சூழல் பாதிப்பு அடைவதாக ஆய்வு கூறுகிறது.
மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ மற்றும் சைபர் ஊடக ஆய்வு நிறுவனம் (Cybermedia research) இணைந்து, `ஸ்மார்ட் போன்கள் மற்றும் மனித உறவுகளில் அதன் தாக்கம் - 2022" (Smart Phones and their impacts on Human Relationships) என்ற தலைப்பில் பல கட்டமாகத் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டன. அதன் நான்காம் பதிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த ஆய்வில், திருமணமான தம்பதிகளின் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து பல தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆய்வில் பங்கெடுத்துக்கொண்ட 67% இந்தியர்கள், தங்கள் இணையுடன் இருக்கும்போதும் ஸ்மார்ட்போன்களையே பயன்படுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். 70% பேர் ஸ்மார்ட் போனை உபயோகப்படுத்தும் நேரத்தில், தங்களின் இணை ஏதாவது பேசினால் எரிச்சலடைவதாகவும் கூறியுள்ளனர்.
அதிக ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் தங்களிடையில் இருந்த உறவின் தன்மை பலமிழந்திருப்பதைத் தாங்களே உணர்ந்திருப்பதாக 66% தம்பதிகள் கூறியுள்ளனர். 89% தம்பதிகள், அர்த்தமுள்ள உரையாடலில் தாங்கள் ஈடுபடுவது குறைந்துவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் ஸ்மார்ட்போன்களின் பாதிப்பு பற்றிக் கூறுவதாக இருந்தாலும், இந்த ஆய்வின் மூலம் மாற்றத்துக்கான சிறு நம்பிக்கையும் கிடைக்கிறது. இதில் பங்குகொண்ட 88% பேர், தங்களுக்கு நேரிடும் பாதிப்புகளை உணர்ந்துள்ளதாகவும், மாற்றத்துக்கு தயாராக இருப்பதாகவும் கூறுகின்றனர். 90% பேர் தங்கள் இணையுடன் கூடுதல் நேரத்தைச் செலவிட விரும்புவதாகவும் கூறுகின்றனர். இது, மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் உறவின் தன்மை கெடுவதை உணர்ந்து மாற்றுத்துக்குத் தயாராக உள்ளதைப் புலப்படுத்துகிறது.