அமைச்சர்களின் வீடுகள் தாக்கப்பட்டதன் பின்னர் இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் அடுத்த வருடம் பெப்ரவரி 21ம் திகதி வரை நிரந்தர பொலிஸ் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட மாட்டார்கள் என பொலிஸ் மா அதிபர் நேற்று (15) உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றம் பரிசீலித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
பொலிஸ் தலைமையக பரிசோதகர் லக்மால் விஜேரத்ன உள்ளிட்ட 14 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் ஆகியோரும் உள்ளடங்குவர்.
கடந்த மே 9ஆம் திகதி அமைச்சர்களின் வீடுகள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து தாங்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து தாங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.