Our Feeds


Wednesday, December 21, 2022

ShortNews Admin

ஒரு தமிழ் MP கூட அரசியலமைப்பு பேரவையில் இடம்பெற முடியாத நிலைமையை இனவாதிகள் ஏற்படுத்த முயல்கிறார்கள். - மனோ கடும் காட்டம்.




அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்.


அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு எம்பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்பிக்களும்,  ஒரு முஸ்லிம் எம்பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள். இறுதி ஏழாவது எம்பியாக ஒரு தமிழ் எம்பி இருக்க வேண்டும் என்பது மிக, மிக நியாயமான ஒரு எதிர்பார்ப்பு. ஆனால், இதையும்கூட தட்டி பறிக்க உதயகம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரின் “உத்தர சபை” கட்சி முயல்கிறது. 


அந்த நியமனம் உதய கம்மன்பில எம்பிக்கு வழங்க வேண்டும் என அந்த கட்சி பிடிவாதம் பிடிக்கிறது. இது உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம். திருத்த முடியாத திமிர்வாதம். இதை எதிர்த்து முறியடிப்பதில், தமிழ் தேசிய கூட்டமைப்புடன், தமிழ் முற்போக்கு கூட்டணி, இரட்டை குழல் துப்பாக்கியாக இணைந்து செயற்படும் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார். 


அரசியலமைப்பு பேரவை நியமனங்களில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமை தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியதாவது,


அரசியலமைப்பு பேரவையில் சட்டப்படி பத்து உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். அதில் ஏழு எம்பிக்களும், மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இடம் பெற வேண்டும். இந்த எம்பிகளில், நான்கு சிங்கள எம்பிகளும், தலா ஒரு எம்பியாக மூன்று எம்பீக்கள், வடகிழக்கு தமிழர், முஸ்லிம்கள், இலங்கை இந்திய தமிழர் ஆகியோரை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். இதுவே நியாயமான நடவடிக்கை. ஆனால், இது நடைபெறவில்லை. 


சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சி தலைவர் ஆகிய மூவரும் தம் பதவிநிலை காரணமாக அரசியலமைப்பு பேரவையில் இடம் பெறுகின்றார்கள். ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவரும் தம் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். இதன்படி ரணில் விக்கிரமசிங்க, தமது பிரதிநிதியாக எம்பி நிமல் சிறிபால சில்வாவையும்,  சஜித் பிரேமதாச தமது பிரதிநிதியாக எம்பி கபீர் ஹசீமையும் நியமித்துள்ளனர்.


அரசாங்கம், பிரதான எதிர்கட்சி ஆகிய கட்சிகளை சாராத சிறுகட்சிகளின் பிரதிநிதியாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். அதன்படி, எம்பி சித்தார்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரேரித்துள்ளது. இப்போது இதுவே பிரச்சினையாக மாறியுள்ளது.


மொட்டு கூட்டணியில் தெரிவாகி விட்டு, அரசாங்கங்கத்தின் எல்லா தவறுகளுக்கும் காரணமாகி விட்டு, இப்போது எதிர்கட்சி பக்கத்தில் வந்து உட்கார்ந்துள்ள உதயகம்மன்பில, விமல் வீரவன்ச கும்பல், இதையும் தட்டி பறிக்க பார்க்கிறது.  


உண்மையில், இந்த விவகாரத்தில் மலையக இந்திய வம்சாவளி தமிழரே முதலில், அநீதிக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம், அவர்கள் நியமிக்கும் எம்பியாக இந்திய வம்சாவளி தமிழரை பிரதிநித்துவம் செய்யும் ஒரு எம்பியை நியமிக்கும்படி, நானும், எம்பி பழனி திகாம்பரமும் கோரிக்கை விடுத்தோம்.   


தான் ஏற்கனவே, எம்பி நிமல் சிறிபால சில்வாவை பெயரிட்டு விட்டதாகவும், முதலிலேயே கூறி இருந்தால், பரிசீலிக்க இடமிருந்தது என   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் கூறினார். தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பி ஒருவரை தமது பிரதிநிதியாக நியமிக்க முதலில் எம்மிடம் உடன்பட, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பிறகு தமது கட்சியில் இருந்து, எம்பி கபீர் ஹீசிமை நியமிக்க வேண்டிய கட்டாயம் தனக்கு உள்ளதாக கூறினார். எம்பி கபீர் ஹீசிம் சகோதர முஸ்லிம் எம்பி என்பதால் அதை நாம் புரிந்துக்கொண்டோம். 


இந்நிலையில்,   மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவர், கட்டாயம் மலையக இந்திய வம்சாவளி தமிழராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும், அதற்கான பெயரையும் நாம், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக, பிரதமர், எதிர்கட்சி தலைவர் ஆகியோரிடம் சிபாரிசு செய்து வழங்கியுள்ளோம். 


இத்தகைய பின்னணியில்,  இறுதியான ஒரேயொரு எம்பி நியமனத்தில், எம்பி சித்தார்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு சிபாரிசு செய்துள்ளது. அது சட்டப்படியும், அரசியல் நியாயப்படியும் சரியானது. ஆகவே அதை நாமும் ஆதரிக்கிறோம். இதையே இன்று பிரச்சினைக்கு உள்ளாக்கி, அதையும் தட்டிப்பறித்து, ஈழத்தமிழ், மலையக தமிழ் என்ற பேதமில்லாமல் ஒரு தமிழ் எம்பிகூட அரசியலமைப்பு பேரவையில் இடம்பெற முடியாத நிலைமையை இனவாதிகள் ஏற்படுத்த முயல்கிறார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »