லஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஈவா கெய்லி மேலும் ஒரு வாரம் விளக்க மறியலில் இருப்பார் என அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
ஈவா கெய்லி நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார். எனினும், அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறையில் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக அவரால் விசாரணைக்கு சமுகமளிக்க முடியவில்லை எ ன ஈவா கெய்லின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இதனால் ஈவா கெய்லி எதிர்வரும் 22 ஆம் திகதிவரை சிறையில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
கத்தாருடன் தொடர்புடையதாக்க கூறப்படும் லஞ்சக் குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பெல்ஜிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் ஈவா கெய்லி.
இவர்களுடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல்களில் 15 லட்சம் யூரோ பணம் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்படும் வரை அவர் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உப தலைவர்களில் ஒருவராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
44 வயதான ஈவா கெய்லி, கிறீஸை சேர்ந்த முன்னாள் தொலைக்காட்சி ஊடகவியலாளராவார். தன்மீதான குற்றச்சாட்டை ஈவா கெய்லி மறுத்துள்ளார்.
உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்தும் கத்தார் மீது, தொழிலாளர் நலன்கள் மற்றும் மனித உரிமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், தன்னைப் பற்றிய அபிப்பிராயத்தை மேம்படுத்துவதற்காக கத்தாரிடமிருந்து பெருந்தொகை பணத்தை லஞ்சமாகப் பெற்றதாக மேற்படி நால்வர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தான் தவறு எதுவும் செய்யவில்லை என கத்தார் தெரிவித்துள்ளது.