Our Feeds


Sunday, December 4, 2022

ShortNews Admin

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணிகளை வழங்க முடியாது என கூற யாருக்கும் உரிமையில்லை - உதயகுமார் MP



பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணிகளை வழங்க முடியாது என கூற யாருக்கும் உரிமையில்லை. இது அவர்களின் உழைப்பால் உருவான நிலம். மலையக மக்களின் உயரிய அரசியல் உரிமைகளில் ஒன்றாக காணப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சும் நீக்கப்பட்டுள்ளது. 


கடந்த வாரம், இந்த பாராளுமன்றத்தில் நுவரெலியா மாவட்டத்திற்கு தருவதாக கூறி  காணாமல் போன பிரதேச செயலகங்கள் குறித்து நான் கேள்வி எழுப்பியிருந்தேன். 


அதேபோன்று, நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இன்றி, மலையக மக்கள் வாழும் அனைத்து மாவட்டத்திற்குமான காணாமல் போய் உள்ள ஒரு அமைச்சு குறித்து இன்றைய தினத்தில் பேசலாம் என நினைக்கிறேன்.


தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சாக இருந்து - பின்னர், மலைநாட்டு புதிய கிராமங்கள் என்ற அமைச்சாக புதுப்பொலிவுடன் கௌரவ பெயர் பெற்று பின்னர் -  மீண்டும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சாக தரம்குறைப்பு செய்யப்பட்டு -  தற்போது முழுமையாக காணாமல் போய் உள்ளது.


ஒவ்வொரு வரவு செலவுத் திட்டத்திலும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு அல்லது மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சுக்கு தனியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.


இலங்கை வரலாற்றில் 2023 நிதியாண்டுக்கான  வரவு செலவு திட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு அல்லது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு இல்லை என்பதுடன் -  குறித்த அமைச்சு காணாமல்  ஆக்கப்பட்டுள்ளது. நிதிம் இல்லை -  அமைச்சும் இல்லை


அந்த அமைச்சு வீடமைப்பு  அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ள நிலையில் -  இன்றைய தினம் மலையக மக்களுக்கான வீடமைப்பு தொடர்பில் ஒரு சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன்


வீடமைப்பு என்ற விடயத்தில் -  மலையக மக்கள் மத்தியில் வெற்றிகரமாக பேசப்பட்ட காலமாக -  கடந்த நல்லாட்சி காலம் திகழ்ந்தது.

அப்போது ஆரம்பிக்கப்பட்ட ஏழு பேர்ச் காணியுடனான தனி வீடுகள் பல பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் குடியேறியுள்ள நிலையில் - சில வீடுகள் இன்னும் கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ளது.


2019 ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த வீடமைப்பு திட்டத்தின் முன்னேற்றத்தில் பாரிய  வீழ்ச்சி ஏற்பட்டு  - இன்னும் அது சரி செய்யப்படவில்லை. முன்னாள் அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்கள் தலைமையில், நுவரெலியா உள்ளிட்ட -  மலையக மக்கள் வாழும் ஏனைய மாவட்டங்களில் கட்டப்பட்ட வீடுகள் -  ஆட்சி மாற்றத்தின் பின்னர் பூர்த்தி செய்யப்படாமல் - கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.

அத்தோடு, ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டு - மக்கள் குடியேறிய வீடுகளுக்கான -  காணி உறுதி பத்திரங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.


இந்திய அரசாங்கத்தின் நன்கொடையில் ஆரம்பிக்கப்பட்ட 14 ஆயிரம் வீடமைப்பு திட்டத்தில் நான்காயிரம் வீடுகளுக்கான திட்டம் பெருமளவு நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் பத்தாயிரம் வீட்டு திட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.


இந்திய அரசாங்கம் நமது மக்களின் தேவை அறிந்து  - நல்லிணக்கத்தின் அடிப்படையில் வீடுகள் வழங்க முன்வந்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்துவதில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. அத்துடன், இந்திய வீடமைப்பு திட்டத்திற்கு காணிகளை வழங்குவதற்கு பெருந்தோட்ட கம்பனிகள் பின்வாங்குகிறார்கள்.


பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணிகளை வழங்க முடியாது என கூற யாருக்கும் உரிமையில்லை. இது அவர்களின் உழைப்பால் உருவான இடம்

அவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும்..

அத்துடன்  வீடமைப்பு திட்டத்திற்கான முட்டுக்கட்டைகள் நீக்கப்பட வேண்டும்.


ஆகவே, மலையக மக்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த

பத்தாயிரம் இந்திய வீடமைப்பு திட்டம் எப்போது ஆரம்பிக்கப்படும் ? என்பதை

இந்த சபையின் ஊடாக நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.


நல்லாட்சி அரசாங்கத்தின் பின்னர் - மலையக மக்களினுடைய அரசியல் உரிமை மெது-மெதுவாக பறிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னர் - முதலில் மலைநாட்டு புதிய கிராமங்கள் என்ற அமைச்சு பெயர் மாற்றம் செய்யப்பட்டு -  மீண்டும் பழைய தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சாக மாற்றப்பட்டது.- பொது தேர்தலுக்கு பின்னர் மலையக மக்களுக்கென உருவாக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சும் நீக்கப்பட்டது.-  அது ராஜாங்க அமைச்சாக மாற்றப்பட்டது

பின்னர், நாட்டில் இடம் பெற்ற போராட்டங்களை அடுத்து -  ஏற்பட்ட புதிய அரசாங்கத்தில் - மலையக மக்களின் உயரிய அரசியல் உரிமைகளில் ஒன்றாக காணப்பட்ட - அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சும் நீக்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு நீக்கப்பட்ட அமைச்சு - வீடமைப்பு அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளதால் -  கைவிடப்பட்ட வீடுகளை உடனடியாக பூர்த்தி செய்து -  மக்கள் குடியேற வழி செய்யுமாறும் -  காணி உறுதிப் பத்திரங்களை வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.


நாட்டில் பொருளாதார பிரச்சினை போன்று  - தொழிலின்மை பிரச்சினையும் இன்று மேலோங்கி  நிற்கிறது.


அதனால், முடிந்தளவு தொழிலாளர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப அரசாங்கம் பாரிய பிரயத்தனம் செய்கிறது. 

இருந்த போதும், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு  அனுப்பும் நபர்களுக்கான- தொழில் பாதுகாப்பு தொடர்பில் தொழில் அமைச்சு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.  

எனெனில், அண்மை காலத்திலே வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று அங்கு பாலியல் உள்ளிட்ட பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான இலங்கை பெண்கள் தொடர்பில் சர்வதேச அளவில் செய்திகள் பரவி உள்ளன.

இது நாட்டுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட பெண் தொழிலாளர்கள் - மற்றும் அவர்களுடைய குடும்பமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


மலையகப் பகுதிகளில் இருந்தும் பலர் இன்று வெளிநாடு நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.


பெருந்தோட்ட துறையிலே உள்ள தொழிலாளர்கள் கம்பெனிகளால் நசுக்கப்படுகின்றமை மற்றும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாமை பிரதான காரணமாகும். 


ஏழு வருடங்களாக 1000 ருபா சம்பள விடயத்தை பேசிக்கொண்டு இன்னும் அது முழுமையாக கிடைக்காமல் - ஆயிரம் ருபா சம்பளம் வழங்க ஆயிரம் நிபந்தனைகள் விதித்து - பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுகிறது.


இன்று  பெருந்தோட்டத்துறை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கு முறையாக வேலை வழங்கப்படுவதில்லை.


பெருந்தொட்டத் துறையில் காணப்படுகின்ற மொத்த தொழிலாளர்களில் 40 தொடக்கம் 45 சதவீதமானவர்கள் தற்போது அந்த தொழில் துறையை விட்டு விலகி சென்று  உள்ளனர்.தற்போது சுமார் 134,000 தொழிலார்கள் மாத்திரமே உள்ளனர்.


தொழில்துறையில் முன்னேற்றம் இல்லாமை, தொழில் பாதுகாப்பின்மை, தொழில் துறையை நவீனமயப்படுத்தாமை போன்ற பல்வேறு காரணங்களால் இவ்வாறு தொழிலாளர்கள் தொழிலை விட்டு செல்கின்றனர்.


மேலும், பெருந்தோட்ட நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி  - பெயர் பதிவு செய்த தொழிலாளர்களை புறக்கணிப்பதால் தற்போது  புதிய பிரச்சினை வந்துள்ளது. 

ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கும் போது அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி போன்றவற்றை செலுத்த வேண்டிய அவசியமில்லை.  வேலை செய்யும் நாளுக்கான சம்பளத்தை மட்டும்  வழங்கினால் போதும். 


இது நிரந்தர தொழிலாளர்களை முடக்குவதற்காக கம்பெனிகள் மேற்கொள்ளும் கைங்கரியமாக பார்க்கப்படுகிறது.


இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நிரந்தரமாக தொழில் புரியும் தொழிலாளர்களின் வேலை நாட்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.  அவர்களுக்கான தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.


இது குறித்து பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு அழுத்தம் கொடுத்து   தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »